சிதிலமடைந்த சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

வந்தவாசி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் 12-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு


வந்தவாசி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் 12-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்வில்லிவலம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கிராம மக்கள் கோயிலை அண்மையில் சுத்தம் செய்தபோது அங்கு கல்வெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.  இதுகுறித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த த.ம.பிரகாஷ், ச.பாலமுருகன், முனைவர் சுதாகர், வந்தவாசி துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன், சாமி.கபிலன் உள்ளிட்டோர் அண்மையில் அங்கு சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். 
இதுகுறித்து மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன் கூறியதாவது: 
இந்தக் கோயிலின் வடக்கு அடித்தளப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குலோத்துங்க சோழர் காலத்து கல்வெட்டு சிதிலமடைந்து இருந்தாலும், அதில் கிடைக்கப் பெற்ற 13 வரிகளில் கோயிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட செய்தி தெரிய வருகிறது.  மேலும், இந்தக் கோயிலின் சிதிலமடைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 18 வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டில் தாமல் வெங்கடப்பர் நாயக்கர் என்பவர் ஏரி மீன்கள் மூலம் வரும் வருவாயில் ஏரிக்கரையில் பனைமரம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோயில் பகுதியிலிருந்து கல்லால் ஆன விளக்கும், அதற்கு எண்ணெய் ஊற்றுவதற்கான கல்கரண்டியும் கிடைத்துள்ளது. கோயில் சிதைவுகளை இன்னும் ஆய்வு செய்தால் மேலும் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 
இந்தக் கோயில் கல்வெட்டின் காலத்தைப் பார்க்கும்போது இது குலோத்துங்க சோழன் காலத்தியது என்றாலும், எந்த குலோத்துங்கன் காலத்தியது என அறிய இயலவில்லை. எனினும், இதன் எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது இதன் காலம் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டின் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இதன் மூலம், இந்தக் கோயில் சுமார் 700 ஆண்டுகளாக நல்ல நிலையில் இருந்திருக்கலாம் என்றும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வழிபாடின்றி சிதிலமடைந்திருக்கலாம் என்றும் தெரிய வருகிறது என்றார்.
இதனிடையில், இந்தக் கோயிலில் கிடைத்த லிங்கம், நந்தி உள்ளிட்ட சிலைகளை, தற்காலிகக் கூரை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோயிலை மேலும் ஆய்வு செய்யவும், புனரமைத்து கொடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com