தேர்தல் தேவதைகள்...! தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த  புகழ்...!

தேர்தல்  முடிந்தாலும்  வாக்குப் பதிவு எந்திரங்கள்  குறித்த பரபரப்பு அதிகரித்தபடி உள்ளது. அதனால்  அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும்
தேர்தல் தேவதைகள்...! தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த  புகழ்...!


"தேர்தல் பணிகளை செய்ய  நடிகை வந்திருக்காரா.."

தேர்தல்  முடிந்தாலும்  வாக்குப் பதிவு எந்திரங்கள்  குறித்த பரபரப்பு அதிகரித்தபடி உள்ளது. அதனால்  அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும்  அதிதீவிர பரபரப்புடன்  இன்னும் பல நாட்கள் இயங்குவார்கள்.  தேர்தல்  சமயங்களில், அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள், காவலர்கள் அனைவரும் பொறுப்புடன் இயங்கியே ஆகவேண்டிய கட்டாயம். தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள்  தேர்தல் எந்திரத்தைக் கொண்டு போக.. தேர்தல் நாளன்று   வாக்கு பதிவு நடக்கும்  போது...  வாக்களிக்கும் நேரம் முடிந்ததும் எல்லாம் சரிபார்த்து வாக்கு எந்திரத்தைத் திரும்ப  ஒப்படைக்கும் வரை தாவு தீர்ந்துவிடும்.  அதுவும் பெண்கள் என்றால் உடல் உபாதைகள்  தேர்தல் சமயத்தில்  வந்துவிட்டால் அவர்களுக்கு இருக்கும்  டென்ஷன்  பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட  இருந்த, ஈடுபட்ட சில பெண் அலுவலர்கள்    மரணப்பட்டதையும்  சேர்த்துப் பார்த்தால் தேர்தல் வேலையின் பளு, சுமை, டென்ஷன்   புரியும். அதே சமயம் கொஞ்சமும்  பதட்டப்படாமல் அலட்டிக் கொள்ளாமல் தேர்தல் வேலைகளை  அருமையாக  கச்சிதமாக  எளிதாக செய்து   முடிக்கும் ஆண், பெண் அலுவலர்கள் மிக அதிகம். 

சமீபத்தைய தேர்தல்  வேலையில்   ஈடுபட்ட  இரண்டு பெண்கள் அகில  இந்திய  அளவில்    இணைய தளங்களில் 'தேர்தல் தேவதைகளாக'ப் பிரபலமாகியிருக்கிறார்கள். "தேர்தல் பணிகளை செய்ய  நடிகை வந்திருக்காரா.."  என்று கேட்கும் ரேஞ்சிற்கு   சிலர்  போய்விட்டார்கள். அந்த அளவுக்கு ஆர்வமாக அந்த இரண்டு பெண்களைப் பார்க்க, பேச, செல்ஃபி  எடுத்துக் கொள்ள வாக்காளர்கள்  ஆர்வம் காட்டினர். கூட்டம்  கூடினர். 

மத்திய பிரதேசத்தில் போபால் நகரில்  தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல்பெண்  பணியாளர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்கிறார்.  சமீபத்தில் போபாலில்  மக்கள் அவை தேர்தலின் ஆறாம் கட்ட தேர்தல் . வாக்குப் பதிவு  நடந்து முடிந்தது.  இந்த தேர்தல் மத்திய பிரதேசம் பொறுத்தவரை  மிக முக்கியமானதாகும். 

பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் என்ற பெண்மணிக்கும்    காங்கிரஸ்  தலைவர்  திக் விஜய் சிங்குக்கும்  இடையே  போட்டா போட்டி.  இந்தியாவே  இந்த  தொகுதியின் முடிவினை  ஆவலுடன்  எதிர் நோக்கி இருக்கிறது.  இந்த இரு போட்டியாளர்களுக்கு இணையாக  தேர்தல் பெண்  அலுவலர்  ஊடகங்களில் இடம் பிடித்துள்ளார். போபால்  நகரின் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் யோகேஷ்வரி கோகித் என்ற  பெண் அதிகாரி தேர்தல் பணியாற்றினார்.  யோகேஷ்வரி கோகித்  கனரா வங்கியில் பணியாற்றுபவர். 

யோகேஷ்வரி கோகித் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நடந்து வந்த புகைப்படம்தான் சமூக வலைதளத்தில் அதகளமாகியிருக்கிறது.  இந்தப் பெண்ணுடன்  அவர் அணிந்திருந்த  நீல நிற உடையும்  பிரபலமாகியுள்ளது. அவரது படங்கள் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டதும்,  பெண்கள் உட்பட பலரும்  'யார் இந்த பெண்... என்ன பெயர்.. எங்கு வேலை செய்கிறார்.."  என்று தேட ஆரம்பித்து  யோகேஷ்வரி கோகித்தின்  முகநூல் பக்கத்தையும் அணுகிவிட்டனர்.   யோகேஷ்வரி கோகித்தின் உடையும், வாக்காளர்களிடம் பழகிய விதமும், தேர்தல் பணிகளை  திறமையாக கையாண்ட விதமும்  வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரையும்  கவர்ந்து விட்டது.

பலரும் யோகேஷ்வரி கோகித்துடன் 'செல்ஃபி' எடுத்துச் சென்று  அவர்களது  சமூக தள பக்கங்களில் பதிவேற்றம் செய்ய ... யோகேஷ்வரி கோகித்தைத் தொடருபவர்களின் எண்ணிக்கை  இரண்டு நாட்களில் எகிறியுள்ளது. அதனால்  அங்குள்ள சானல்கள்  யோகேஷ்வரி கோகித் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். இவரைப் பார்க்க  வெளியே பெரிய அளவிற்கு கூட்டம் கூடியிருந்ததாம்.  இவரது சமூக தள பக்கங்களில்  'என்னை ஃபிரண்ட்'டாக்கிக் கொள்ளுங்கள் என்ற  வேண்டுதல்கள்  வருவது  அதிகமாகிவிட்டதால்,  ‘என்னடா  பெரிய வம்பா போச்சேன்னு.." யோகேஷ்வரி கோகித் தற்சமயம்  சமூக வலைத்தளங்களிலிருந்து   விலகியிருக்கிறார். வாக்குச்சாவடிக்குள் யோகேஸ்வரியுடன்  'செல்ஃபி'  எடுத்துக் கொள்ள  அதிகம் பேர்கள் ஆர்வம் காட்டினாலும் 'டூட்டி சமயத்தில்  'செல்ஃபி'   எடுக்கக் கூடாது’ என்று  தவிர்த்துவிட்டிருக்கிறார்.  "எனக்கு பிடிக்கும் உடைகளை நான் அணிகிறேன்.

எனக்கு திருமணம் ஆகி  ஐந்து வயதில் மகன் இருக்கிறான். எது எப்படியோ  தேர்தல்  வாக்குப் பதிவு எனது வாக்கு சாவடியில்  ஒரு பிரச்சினை இல்லாமல்  நடந்து முடிந்துள்ளது. அதற்கு எனது தோற்றம்  உதவி இருப்பதில் மகிழ்ச்சியே..' என்கிறார் யோகேஸ்வரி, யோகேஷ்வரி கோகித் வரிசையில் வரும் இன்னொரு பெண்மணி  ரீனா திவேதி.  ரீனா  ஒரு நாளில் நட்சத்திர அந்தஸ்த்தை  அடைந்தவர். உத்திர பிரதேச அரசுப் பணியாளர் ரீனா.  பொது மராமத்து துறையில் இளநிலை உதவியாளராகப் பணி புரிகிறார். லக்னோ வாக்குச்சாவடி ஒன்றில்  ரீனாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. ரீனா  வாக்குப் பதிவு எந்திரத்தை  தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்து  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய  அது வைரலானது. முப்பத்திரண்டு வயதாகும்  ரீனா பட்டதாரி.  கணினி பயிற்சியும் முடித்திருக்கிறார்.    'வாட்சாப்'  டிக் டாக்' தளங்களில் சுறுசுறுப்பாக  இயங்கி வருவதால் பிரபலமாகியிருப்பது பழகிவிட்டதாம். 

“எனக்கு சின்ன வயதிலேயே  திருமணம் ஆகிவிட்டது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மகன் இருக்கிறான்.  நான் 2014, 2017  தேர்தல்களிலும் பணி புரிந்திருக்கிறேன்.  அப்போதும் நான் கவனிக்கப்பட்டேன் என்றாலும், இப்போது மாதிரி  சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில்  என்னைப் பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை. வாக்காளர்கள்  என்னை விரும்புகிறார்கள். தான் கவனிக்கப்படுவதை விரும்பாதவர்கள் யார்.. ஊடகங்களில்  வெளிவந்த  எனது படங்களை பார்த்த மகன்  ஆதித்  "படங்களில் இருப்பது நீங்கள்தான்  என்று நண்பர்கள் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க.. வாக்கு சாவடியிலிருந்து  எனக்கு ஒரு வீடியோ கால் பண்ணு.." என்று கெஞ்சினான்" என்கிறார் ரீனா. 

ரீனா  தேர்தல்  பணி புரிவதை  காணொளி காட்சியாகப் பலரும்  படம் பிடித்துள்ளனர். ரீனா யாரையும் தடுக்கவில்லை. அப்படி எடுக்கப்பட்ட காணொளிகள்  பல  பொருத்தமான  இந்தி திரைப்படப் பாடலுடன்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   ரீனா, யோகேஷ்வரி பணி புரிந்த  வாக்கு சாவடிகளில்  அதிக வாக்குகள் பதிவாயின  என்று சொல்ல வேண்டியதில்லையே..! யோகேஷ்வரி, ரீனாவுக்குக்  கிடைத்திருக்கும்   நட்சத்திர அந்தஸ்த்தைக்  கண்ட   தேர்தல் ஆணையம்   அடுத்து வரும் தேர்தல் சமயங்களில்  இவர்களை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்   என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com