மருத்துவக் கழிவுகள் வெளியேற்றம்: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிரி கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகின்றனவா என்பது குறித்து மருத்துவ சேவைகள்
முறையாக அப்புறப்படுத்தப்படாத மருத்துவக் கழிவுகள்.
முறையாக அப்புறப்படுத்தப்படாத மருத்துவக் கழிவுகள்.


தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிரி கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகின்றனவா என்பது குறித்து மருத்துவ சேவைகள் இயக்குநரக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனுடன் சேர்த்து மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு உரிமம் அளிப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் செயல்படும் 51 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்பட 365 மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிச் சான்று இல்லாமல் செயல்படுவது அண்மையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது இந்த விவரங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. அது மட்டுமன்றி, 715 மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான அங்கீகாரம் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 95 மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையான அனுமதியும், அங்கீகாரமும் இன்றி மருத்துவமனைகள் செயல்படுவது சமூகத்துக்கு நல்லதல்ல என்று பரவலாக கருத்தும் எழுந்தது. 

இதற்கு நடுவே, உயிரி கழிவுகளை முறையாக அகற்றும் நடைமுறைகள் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில சுகாதாரத் துறைக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கடந்த சில நாள்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் மாவட்ட வாரியாக அந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரகத்துக்கு அதுதொடர்பான அனைத்து விவரங்களும் அடுத்த வாரத்துக்குள் கிடைத்துவிடும் என்றும், அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்படுகின்றன. அவற்றில் பல மருத்துவமனைகள் பதிவு உரிமம் இன்றி இயங்கி வருகின்றன. இதையடுத்து, அவற்றை முறைப்படுத்தி உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை 18 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளன.

ஏறத்தாழ 52 ஆயிரம் மருத்துவமனைகள் அதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. மே 31 வரை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகும் மருத்துவமனைகள் பதிவு செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளையில், உரிமம் கோரி விண்ணப்பித்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனுடன், தீர்ப்பாய உத்தரவின்படி மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com