
மக்களுக்கு விருப்பமில்லை எனில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து வெளியிட்ட வாக்குக் கணிப்பைக் காட்டிலும் கூடுதலாக வெற்றி பெறுவோம். எதிர்க்கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேல் சந்தேகம் உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்ற போது இயந்திரத்தின் மீது சந்தேகம் எழாமல் தற்போது வந்துள்ளது வியப்பளிக்கிறது.
நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க வேண்டும். யாகம் வளர்த்தால் மழை வருமா? எனக் கேட்ட காங்கிரஸ் கட்சி, தேர்தலில் வெற்றி பெற யாகம் வளர்க்கிறது. நாங்கள் செய்யும்போது கேலி கிண்டல் செய்த தி.க. தலைவர் கி.வீரமணி போன்றவர்கள் தற்போது எங்கே போனார்கள். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை எதிர்க்கட்சிகளுக்கு வராது. ஏனெனில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிப்படைந்தவர் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொருத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோதனை மேற்கொள்ள கையெழுத்திட்டதைப் போல, நாங்களும் இப்போது சோதனைதான் செய்து வருகிறோம். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் என்றார்.