வேலைவாய்ப்பு பெறும் பொறியியல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வேலைவாய்ப்புப் பெறும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது சற்று அதிகரித்திருக்கிறது.


வேலைவாய்ப்புப் பெறும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது சற்று அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மென்பொருள் நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து குறைந்து வந்தது.
இப்போது மென்பொருள் நிறுவனங்களின் நிலை மீண்டும் மேம்படத் தொடங்கியிருப்பது, பொறியாளர்கள் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2017 இறுதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பு பெறும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2018-19-ஆம் ஆண்டில் சற்று அதிகரித்திருப்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, அகில இந்திய அளவில் 2013-14 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பைப் பெற்ற பொறியியல் மாணவர்கள் 31 சதவீதம் பேர் மட்டுமே. இது 2014-15 இல் 38 சதவீதமாகவும், 2015-16 இல் 42 சதவீதமாகவும், 2016-17 இல் 46 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.
பின்னர் 2017-18 இல் 1 சதவீதம் குறைந்து 45 சதவீதமாக இருந்துள்ளது. அந்த ஆண்டில் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த 7 லட்சத்து 50,320 பேரில் 3 லட்சத்து 43,438 பேர் மட்டுமே உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஆனால், 2018-19-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 53 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நாடு முழுவதும் பொறியியல் படிப்பில் சேர்ந்த 6 லட்சத்து 97,326 பேரில் 3 லட்சத்து 74,300 பேர் உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில்...: அதுபோல, தமிழகத்தைப் பொருத்தவரை 2013-14 ஆம் ஆண்டில் 39 சதவீதமாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 49 சதவீதமாகவும், 2015-16 ஆம் ஆண்டில் 55 சதவீதமாகவும், 2016-17 ஆம் ஆண்டில் 59 சதவீதமாகவும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
2017-18 ஆம் ஆண்டு 5 சதவீதம் குறைந்து 54 சதவீதமாக இருந்துள்ளது. அந்த ஆண்டில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என ஒட்டுமொத்த பி.இ. இடங்களில் சேர்ந்த 1லட்சத்து 47,771 பேரில் 80 ஆயிரத்து 478 பேர் மட்டுமே உடனடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதுபோல் 2018-19-ஆம் ஆண்டில் 71 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த பொறியியல் படிப்பில் சேர்ந்த 1லட்சத்து 40,803 பேரில் 99 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் உடனடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com