தமிழகத்தின் தேர்தல் விநோதங்கள்: நோட்டா படைத்த பல அரிய சாதனைகளின் பட்டியல் இதோ

நான் நோட்டாவுக்குத்தான் வாக்களித்தேன் என்று கூறிய பல வாக்காளர்களை கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது இந்தியா. தமிழகத்திலும் இதே நிலைதான்.
தமிழகத்தின் தேர்தல் விநோதங்கள்: நோட்டா படைத்த பல அரிய சாதனைகளின் பட்டியல் இதோ


நான் நோட்டாவுக்குத்தான் வாக்களித்தேன் என்று கூறிய பல வாக்காளர்களை கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது இந்தியா. தமிழகத்திலும் இதே நிலைதான்.

அப்படி நோட்டாவுக்கு வாக்களித்ததன் மூலம் ஒருவர் படைக்கும் சாதனை என்ன? ஒருவர் நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த சாதனையும் படைக்கப்படவில்லை என்றாலும், இப்படி ஏராளமானோர் போடும் ஓட்டுகளால் நோட்டா பல சாதனைகளைப் படைக்கிறது என்பது மட்டுமே உண்மை.

சரி வாருங்கள் தமிழகத்தில் நோட்டா இந்த முறை படைத்த சாதனைகளின் பட்டியலைப் பார்க்கலாம்..

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றது. அதிமுக கூட்டணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்ப நோட்டாவில் தங்கள் வாக்கைப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது பதிவான மொத்த வாக்கு சதவீதத்தில் 1.8 சதவீதமாகும். 

கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் சிலரை விட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றது.

கடலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளில் சில ஆச்சரியங்கள் அமைந்திருந்தன. தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதிமய்யம் உள்பட மேலும் பல பதிவு பெற்ற அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளுமாக 21 பேர் களத்தில் இருந்தனர். 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் பதிவான 65 வாக்குகளுடன் 8,725 வாக்குகளை நோட்டா பெற்றது. 

அதே நேரத்தில் இந்த எண்ணிக்கையை விட குறைவாக பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சி.ஜெயபிரகாஷ் (2,827), அகில ஊழல் தடுப்பு இயக்கத்தின் வேட்பாளர் குப்புசாமி (7,540), தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் செல்லதுரை (2,527) உட்பட பல கட்சி வேட்பாளர்களே குறைவாக வாக்குகளைப் பெற்றனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி தேசியக் கட்சியாகவும், மற்ற கட்சிகள் பதிவு பெற்ற கட்சியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நோட்டாவு பெற்ற வாக்குகள்
சென்னையின் 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் மொத்தம் 48 ஆயிரத்து 911 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றில் மொத்தம் 28 லட்சத்து 66 ஆயிரத்து 852 பேர் வாக்களித்தனர்.
இதில், வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற அடிப்படையில், அதிகபட்சமாக தென் சென்னையில் 16,891 பேர், வட சென்னையில் 15,687 பேரும், மத்திய சென்னையில் 13,822 பேர், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 2,511 பேர் என மொத்தம் 48 ஆயிரத்து 911 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

நோட்டாவுக்கு மவுசு குறைந்ததா?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நோட்டா வாய்ப்பைப் பயன்படுத்திய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நோட்டா வாய்ப்பை 1.44 சதவீத வாக்காளர்கள் (5.82 லட்சம் பேர்) பயன்படுத்தினர்.

இந்த மக்களவைத் தேர்தலில் நோட்டா 1.28 சதவீத வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்காடு இடைத் தேர்தலின் போது முதல் முறையாக நோட்டா வாய்ப்பு பயன்படுத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 4 ஆயிரத்து 76 வாக்காளர்கள் நோட்டா வாய்ப்பினைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த ஆண்டு நோட்டாவின் மவுசு குறைந்திருப்பதாகவேக் கருதப்படுகிறது. இதற்கு மாற்று சக்திகள் என்ற வகையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தேர்தலில் களம் கண்டதே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொசுறு தகவலாக... 

ஆந்திரத்தில் நோட்டாவிடம் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ்!

ஆந்திரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதுமட்டுமன்றி அந்த மாநிலத்தில் நோட்டாவை விட இரு கட்சிகளும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளன. 

ஆந்திரத்தில் உள்ள 175 பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியால், 3 மக்களவைத் தொகுதிகளிலும், 23 பேரவை தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 

அந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் தனித்து போட்டியிட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 1.17 சதவீத வாக்குகளையும், பாஜக, 0.84 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 4,01,969 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் 1.28 சதவீதமாகும். 

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெறும் 1.29 சதவீத வாக்குகளையும், பாஜக, 0.96 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 1.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 2.77 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. இந்த முறை அதிலும் குறைந்து, நோட்டாவை விட காங்கிரஸ் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 2.18 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், 4 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை பாஜக பல மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றாலும், ஆந்திரத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com