ஆண்டிபட்டி இடைத்தேர்தல்: தம்பியை வீழ்த்திய அண்ணன்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான உடன்பிறந்த தம்பியை வீழ்த்தி, திமுக வேட்பாளரான அண்ணன் வெற்றி பெற்றார்.
ஆண்டிபட்டி இடைத்தேர்தல்: தம்பியை வீழ்த்திய அண்ணன்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான உடன்பிறந்த தம்பியை வீழ்த்தி, திமுக வேட்பாளரான அண்ணன் வெற்றி பெற்றார்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. தொகுதி முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. இதில், பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் முகவர்களுக்காக நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடியால், அங்கு மறுவாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடத்தப்பட்டது.  ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 2,63,100 வாக்களர்கள் உள்ளனர்.

இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தேனி கம்மவர் சங்கம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை(மே23) நடைபெற்றது.  இதில், முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் மகாராஜன் 3,969 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆ.லோகிராஜன் 3.970 வாக்குகள் பெற்று பெற்று அதிமுக வேட்பாளர் 1 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.  தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த அதிமுக வேட்பாளர் 5 வது சுற்றில் 1,257 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

6 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 22,445 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 22,327 வாக்குகள் பெற்றதில் திமுக 118 வாக்குகள் முன்னிலை பெற்றது.தொடர்ந்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் போட்டி நிலவி வந்தது. இந் நிலையில் 10 ஆவது சுற்றில் கண்டமனூர் வாக்குச்சாவடி வாக்கு இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குச் சீட்டுகளை கடைசியாக எண்ணுவது என முடிவானது.

இதேபோன்று 15 மற்றும் 20 சுற்றுகளில் தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு இயந்திரம் தொகுதி விட்டு தொகுதி மாறி வைக்கப்பட்டிருந்ததால் , அதனை மாற்றி எண்ணும் பணியும் இறுதியாக நடைபெற்றது. இதனையடுத்து, இறுதியாக தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து வாக்குகள் எண்ணும் பணி நிறைவு பெற்றது.  இதில், திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் 85,982 வாக்குகள் பெற்று 12,323 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆ.லோகிராஜன் 74,497 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திமுக வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர்.  இதில் திமுக வேட்பாளரான அண்ணன் ஆ.மகாராஜன், அதிமுக வேட்பாளரான  தம்பி ஆ.லோகிராஜனை தோற்கடித்தார். மேலும் 1996 ஆம் ஆண்டுக்குப் பின் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com