குன்னூரில் 61-ஆவது பழக் கண்காட்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
குன்னூரில் 61-ஆவது பழக் கண்காட்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-ஆவது பழக்கண்காட்சி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கியது. நீலகிரி மாவட்ட  தோட்டக் கலைத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவுவாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், பப்ளிமாஸ், வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட 1.5 டன் அளவிலான பழங்களைக் கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. 
நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்  பழக்கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பழக்கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.
கண்காட்சியில் அனைத்து வகை பழங்களைக் கொண்டு தம்பதியுடன் கூடிய  பழவண்டி,  பழ அலங்கார மேடை,  மயில், வண்ணத்துப்பூச்சி  ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த வடிவமைப்புகள் பூங்காவின் வாயில் பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்ததால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த உருவங்களை புகைப்படம் எடுத்தும் அதன்முன் நின்று சுயபடம் எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
பழக் கண்காட்சியில்  சேலம்,  கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மாம்பழ ரகங்கள், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மாம்பழம், சப்போட்டா ரகங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து எலுமிச்சை, நெல்லிக்காய் ரகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாழை,  பலா, மாம்பழ ரகங்கள், புதுக்கோட்டையிலிருந்து  கொய்யா ரகங்கள், ஈரோட்டில் இருந்து மாதுளை ரகங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தர்பூசணி ரகங்கள்,  கோவையிலிருந்து  சப்போட்டா,  மாம்பழம்,  நெல்லிக்காய், மாதுளை, கொய்யா ரகங்கள் அரங்கில் இடம்
பெற்றிருந்தன.
அதேபோல், தேனி மாவட்டத்தில் இருந்து சப்போட்டா, கொய்யா,  வாழை, திராட்சை ரகங்கள், திண்டுக்கல்லில் இருந்து கொய்யா, வாழை, வெண்ணைப் பழம் போன்ற நூற்றுக்கும்  மேற்பட்ட பழ ரகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன .
12 மாவட்டங்களின் பழங்கள் ஒரே அரங்கில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. பல்வேறு வகையான பழங்களை மையமாக வைத்து பொழுதுபோக்கு  அம்சங்கள் கொண்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. பழக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com