சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பு

சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பு

பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சின்ன  மயிலாறு காணிக் குடியிருப்புக்கு சுதந்திரமடைந்த பிறகு முதல்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சின்ன  மயிலாறு காணிக் குடியிருப்புக்கு சுதந்திரமடைந்த பிறகு முதல்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக் குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக் குடியிருப்பு, இஞ்சிக்குழி, சேர்வலாறு காணிக் குடியிருப்பு உள்ளிட்ட பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இவற்றில் சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி இரண்டும் காரையாறு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், அங்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், சின்ன மயிலாறு காரையாறு அணையின் அடிவாரப் பகுதியில் தாமிரவருணியின் அக்கரையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். 30-க்கும் அதிகமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கோடை காலத்தில் தாமிரவருணி நதி வறண்டுபோகும் நிலையில், இங்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இங்கு வசிப்போர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், காப்புக் காடு என்ற வகையில், வனத்துறையினர் மின் இணைப்பு அளிக்க அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு மின் வாரியத்தின் மூலம் 109 பேருக்கு சூரிய மின்கருவி வழங்கப்பட்டது. இந்நிலையில், வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க தற்போது அனுமதி அளித்துள்ளனர். அத்துடன், முழு நிதி உதவியையும் வனத்துறையினரே வழங்கினர். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின் வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக, மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 48 குடியிருப்புகள் மற்றும் ஒரு நீர் இறைக்கும் மோட்டாருக்கு வெள்ளிக்கிழமை (மே 24) மின் இணைப்பு வழங்கப்பட்டது. சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கைராத் மோகன்தாஸ் உத்தரவின் பேரிலும், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் ஓம்காரம் கொம்மு அறிவுறுத்தலின் பேரிலும், முண்டந்துறை வனச்சரகர் சரவணக்குமார், பாபநாசம் வனவர் மோகன், கல்லிடைக்குறிச்சி மின்வாரியச் செயற்பொறியாளர் ராஜேந்திரன், விக்கிரமசிங்கபுரம் உதவிச் செயற்பொறியாளர் திருசங்கர், பாபநாசம் இளநிலைப் பொறியாளர் விஜயராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று காணிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பிற்கான அட்டைகளை வழங்கினர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "நீண்ட நாள்களாக மின்வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டது மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியது: மலைவாழ் மக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும், உடனடியாக ஒப்புதல் வழங்க முடியாத நிலை இருந்தது. இப்போது அனுமதி வழங்கியதோடு, மின் இணைப்பிற்குத் தேவையான அனைத்து நிதி உதவியையும் வனத்துறையே வழங்கியுள்ளது என்றனர்.
சின்ன மயிலாறு மக்கள் கூறுகையில், "நீண்ட நாள் கோரிக்கையான மின்வசதியை செய்து கொடுத்ததற்கு வனத்துறை அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சின்ன மயிலாறுக்கு மழைக்காலங்களில் ஆற்றைக் கடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைத்துத் தரவேண்டும் என்ற எங்களது கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com