மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி: எம்.பி.க்கள் கூட்டத்தில் தேர்வு

மக்களவைத் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி: எம்.பி.க்கள் கூட்டத்தில் தேர்வு

மக்களவைத் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மக்களவை திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ்.பழநிமாணிக்கமும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
17-ஆவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குடன் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 13 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும், ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக தமிழக, புதுச்சேரி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக்  கூட்டணிக்கு அளித்து, திசை திருப்ப முயன்றவர்களைச் செல்லுபடி இல்லாதவர்களாக்கி, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போற்றி வளர்த்து, பண்படுத்திய திராவிட மண்ணான தமிழ்நாடு என்பது அகில இந்தியாவுக்கும் உணர்த்தப்பட்டுள்ளது.
1971, 2004 மக்களவைத் தேர்தல்களில் கருணாநிதி ஈட்டித் தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்று தந்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தமிழகத்தின் உரிமைகளை மீட்டிடவும், நாட்டில் உண்மையான  ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப்  பாதுகாத்திடவும், அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அச்சமின்றிப் பெற்றிடவும் தொடர்ந்து உழைப்போம் என உறுதிமொழி ஏற்கிறோம் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com