முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாள்!

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாள் ஆகிறது. 
முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாள்!


சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாள் ஆகிறது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன். இவர் கூடங்குளம் அணு உலை, கரூரில் மணல் கொள்ளை உள்ளிட்ட சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்தார். இதற்காக இவர் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்த முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் பங்கெடுத்தார். 

இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி முகிலன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என அவர் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான ஆவணப்படம் ஒன்றையும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டார்.  

இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு, முகிலன் அன்றிரவு (பிப்ரவரி 15) சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அடுத்த தினம் அவர் மதுரையை சென்றடையவில்லை. அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன், முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் முகிலனைக் கண்டுபிடிக்கும் வழக்கை விசாரித்து வருகின்றனர்.   

அன்று மாயமான முகிலன் 100 நாள்களாகி இன்றைக்கும் மாயமான நபராகவே தேடப்பட்டு வருகிறார். அவர் மாயமானாரா, மாயமாக்கப்பட்டாரா என்பதும் இதுவரை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com