முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் விலக்கு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் விலக்கு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதற்கான உத்தரவை போக்குவரத்துத் துறை இணை ஆணையரகம், முன்னாள் படைவீரர் நல வாரிய இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளமுன்னாள் படை வீரர்களின் நலன்களுக்காக தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சார்பில் முன்னாள் படை வீரர்களின் நலன்களுக்காக நிதிநிலை அறிக்கையில் தனியாக நிதிகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில், முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் அளிக்கும் போது அதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக் 
கோரி தமிழக அரசுக்கு முன்னாள் படைவீரர் நல வாரியத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக போக்குவரத்துத் துறை, முன்னாள் படைவீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து, போக்குவரத்து இணை ஆணையர் பொன் செந்தில்நாதன், தமிழக முன்னாள் படைவீரர் நல வாரிய இணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989-இன்படி, 
ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென முன்னாள் படைவீரர் நல வாரியம் கேட்டுக் கொண்டிருந்தது. 
அவர்களது இந்தக் கோரிக்கையை ஏற்று முன்னாள் படை வீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் ஓட்டுநர் உரிமத்துக்கான ஸ்மார்ட் அட்டை கட்டணம், சேவைக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை. 
இதேபோன்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தனது உத்தரவில் போக்குவரத்து இணை ஆணையர் பொன். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com