9 தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அளித்திருக்கும் அறிவுறுத்தல்

அதிமுகவுக்கு வாக்களித்து தமிழக அரசு நிலைபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு 9 தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்களுக்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அறிவுறுத்
9 தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அளித்திருக்கும் அறிவுறுத்தல்

சென்னை: அதிமுகவுக்கு வாக்களித்து தமிழக அரசு நிலைபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு 9 தொகுதிகளில் வென்ற அதிமுக வேட்பாளர்களுக்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தங்களது பொன்னான வாக்குகளை அளித்த, வாக்காளப் பெருமக்களுக்கு கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், வாக்காளப் பெருமக்கள் மக்களாட்சியின் இதயம் போன்றவர்கள். ``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என்று முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.ரும், ஜெயலலிதாவும் பலமுறை நமக்கு நினைவுபடுத்தி இருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பல கோடி வாக்காளர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை வழங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சூலூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளப் பெருமக்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே, அதிமுக அரசு நிலை பெற்றிருக்கிறது.

அதே போன்று, நாடாளுமன்ற மக்களவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல் ஒலிப்பதை உறுதி செய்திடும் வகையில், தேனி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் கழக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது. 

தேனி மாவட்ட மக்கள் கழகத்திற்கு அளித்திருக்கும் வெற்றி மாலை, நம் இயக்கத்திற்கு சூட்டப்பட்ட நன்றி மாலையாக அமைந்து, மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசை ஆதரித்து வழிமொழியும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

மக்கள் மனதில் நிலைபெற்றிருப்பது ``இரட்டை இலை’’ சின்னம் தான் என்பதை தங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்திருக்கின்றார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களையும்; சட்டமன்ற இடைத் தேர்தலில், தமிழக அரசையும், அதிமுகவையும், தங்கள் பொன்னான வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்காளப் பெருமக்களையும் நேரடியாக சந்தித்து நன்றி கூற வேண்டியது, கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

எனவே, தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு வாக்களித்தோர் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மனம் மகிழும் வண்ணம், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இன்னும் சிறப்புடன் மக்கள் பணியாற்றி, அனைவரது இதயங்களையும் வென்றெடுக்க நம் தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com