அரியலூர் சித்தேரி பறவைகள் சரணாலயமாக்கப்படுமா?

தற்போது, தண்ணீர் இல்லாமல் வறண்டு, துர்நாற்றம் வீசும் அரியலூர் சித்தேரியை தூர்வாரி பறவைகள் சரணாலயமாக ஆக்க வேண்டும் என்று அரியலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அரியலூர் சித்தேரி பறவைகள் சரணாலயமாக்கப்படுமா?

அரியலூர்: தற்போது, தண்ணீர் இல்லாமல் வறண்டு, துர்நாற்றம் வீசும் அரியலூர் சித்தேரியை தூர்வாரி பறவைகள் சரணாலயமாக ஆக்க வேண்டும் என்று அரியலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் ஏரிகள் அதிகம் ஒருபக்கம், கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சைப்பசேலென வயல்வெளிகள் மறுபக்கம், முந்திரியும், சோளமும், கடலையும் விளையும் மாவட்டமாக விளங்குவது அரியலூர். இம்மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரர் கோயில், ஏலாக்குறிச்சி புனித அன்னை ஆலயம் தவிர வேறு சுற்றுலாத் தலங்கள் கிடையாது.  சீசன் நேரத்தில் மட்டும் கரைவெட்டி பறவைகளால் சரணாலயம் களைகட்டும். மற்ற நேரங்களில் வெறிச்சோடிக் காணப்படும். ஒரு பூங்கா கூட கிடையாது. எனவே பொழுதுபோக்குக்கு இம்மாவட்ட மக்கள் அருகிலுள்ள திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
இந்நிலையில், அரியலூர் நகரத்தின் பிரதான பெரிய ஏரியாக உள்ள சித்தேரி கடந்த சில மாதங்களாக சுற்றுலா மையமாக மாறி வருகிறது. இந்த ஏரியின் கீழ் அரியலூர், தவுத்தாய்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கரில் நெல், மக்காச்சோளம், கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஏரியில் மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால் பல்வேறு இடங்களில் இருந்து பறவை இனங்கள் இந்த ஏரிக்கு இரை தேடி வந்து செல்கின்றன. பகல் நேரங்களில் அருகிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளுக்காகவும், நிழல் வெளிக்காகவும் செல்கின்றன. மாலைகளில் எங்கிருந்தாலும் வழிதவறாது இந்த ஏரிக்கு வந்துவிடுகின்றன. அதனால் பகல் வேளைகளில் வெறிச்சோடியது போலக் காணப்படும் இந்த ஏரி, மாலைகளில் வேறொரு வடிவில் கொள்கிறது. உரிய காலத்தில் 100- க்கும் மேற்பட்ட வகையான நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப் பறவைகளும் வந்து செல்கின்றன.
இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. இவற்றை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 
இந்நிலையில், இந்த ஏரி தற்போது வறண்டு காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மூக்கைப் பிடித்தபடி செல்கின்றனர். மேலும் ஏரிக்கு சாக்கடை நீர் அதிகளவில் வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பறவை இனங்கள் உயிரிழந்து வருகின்றன. 
இதுகுறித்து அரியலூர் நகர்வாசிகள் கூறியது: 
சிமென்ட் ஆலைகள் இருப்பதைத் தவிர இங்கு பொழுது போக்குக்காக ஒரு பூங்கா கூட கிடையாது. மழை பெய்தால் மட்டுமே இங்குள்ள ஏரிகள் நிரம்பி மாவட்டம் பசுமையாகக் காணப்படும். அரியலூர் நகரத்தின் பிரதான ஏரியான சித்தேரியில் மழைநீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும். இதை இப்பகுதி மக்கள் பார்த்து செல்வார்கள். தற்போது இந்த ஏரியில் வெளிநாட்டு பறவை இனங்கள் அதிகளவில் வந்துசெல்வதால் இப்பகுதி மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக அதிகாலை நேரத்தில் ஏரியின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அங்குள்ள மரத்தில் தங்கியுள்ள பறவைகளின் சப்தம் காதுக்கு இனிமையாக இருந்து வருகிறது. 
எனவே ஏரியினுள் சாக்கடை நீர் வருவதை தடுத்து, ஏரியை தூர்வாரி மேம்படுத்தி, ஏரியைச் சுற்றி மரங்கள் 
மற்றும் நடைப் பயிற்சி  மேற்கொள்வதற்காக தரை தளம் உள்ளிட்டவைகளை அமைத்து சித்தேரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com