தாளவாடி அருகே கிராமத்திலிருந்து காட்டுக்குள் திரும்பிச் சென்ற புலி

தாளவாடியை அடுத்த சிமிட்டஹள்ளி வனப் பகுதியில் இருந்து கிராமத்துக்குள் புகுந்த புலி, 24 மணி நேரத்துக்குப்  பின் மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக தொட்டமுதுகரை வனப்பகுதிக்குள் சென்றடைந்தது.
தாளவாடி அருகே கிராமத்திலிருந்து காட்டுக்குள் திரும்பிச் சென்ற புலி


தாளவாடியை அடுத்த சிமிட்டஹள்ளி வனப் பகுதியில் இருந்து கிராமத்துக்குள் புகுந்த புலி, 24 மணி நேரத்துக்குப்  பின் மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக தொட்டமுதுகரை வனப்பகுதிக்குள் சென்றடைந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள பெண் புலி சிமிட்டஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள மனோஜ், பழனிசாமி ஆகியோரின் விளைநிலங்கள் வழியாக சென்று மரத்தடியில் பதுங்கியது. அந்த வழியாகச் சென்ற பழனிசாமி, மரத்தடியில் புலி பதுங்கியிருப்பதைப் பார்த்து  கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த விவசாயிகள், புலி படுத்திருப்பதைக் கண்டு அப்பகுதிக்கு எவரும் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் துப்பாக்கியுடன் வந்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். பின்னர், அந்தப் புலி மரத்தடியில் இருந்து வேறொரு பகுதிக்கு பாய்ந்து ஓடி அங்குள்ள புதர் மறைவில் தஞ்சமடைந்தது. கடும் வெயில் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேறாமல் காலை முதல் மாலை வரை அதே பகுதியில் இளைப்பாறியது.
இதையடுத்து, வனத் துறையினர் புலியைப் பிடிக்க அதன் வழித்தடத்தில் கூண்டு வைத்துக் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மழை பெய்தபோது, விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றைக் கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் புலி சென்றுவிட்டது. இதையடுத்து, புலி நடமாட்டத்தை அறிய வனத் துறையினர் அதன் கால் தடத்தை ஆய்வு செய்தனர். மழை பெய்ததால் ஈரமான நிலத்தில் புலியின் கால் தடம் நன்றாகப் பதிவாகியிருந்தது. அதனைப்  பின் தொடர்ந்து 5 கி.மீ. தூரம் நடந்து சென்று கால் தடயத்தை உறுதி செய்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் குமளி வெங்கட் கூறியதாவது:  புலி இரவு நேரத்தில் வேட்டையாடும் பழக்கம் உள்ளதால் வனத்தில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் புகுந்துள்ளது. பகல் நேரத்தில் மனிதர்கள் நடமாட்டத்தால் அது பதுங்கியிருந்தது. இரவு நேரத்தில் புலி தானாகவே அதன் வழக்கமான வழித்தடத்தில் வனப் பகுதிக்கு சென்றுவிட்டது. புலி நடமாட்டத்தால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் புலி நடமாடும் பகுதியில் கிராம மக்கள் செல்ல வேண்டாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com