2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கச்சமங்கலம் அணையில்  புனரமைப்புப் பணி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணைக்கு முந்தைய மிகப் பழைமையான கச்சமங்கலம் அணையை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கச்சமங்கலம் அணையில்  புனரமைப்புப் பணி


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணைக்கு முந்தைய மிகப் பழைமையான கச்சமங்கலம் அணையை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓடுகிற நீரைத் தேக்கி வைத்து,  பாசனத்துக்குத் திருப்பி விட்ட பெருமை தமிழர்களையே சாரும். 
ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை பண்டை தமிழர்களிடமிருந்துதான் நாம் தெரிந்து கொண்டோம் என கல்லணையை ஆய்வு செய்த சர் ஆர்தர் காட்டன் குறிப்பிட்டார். 
ஆனால்,  கல்லணைக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கச்சமங்கலம் அணை குறித்து வெளியுலகத்துக்குத் தெரியாமல் போனது. 
கல்லணையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது. 
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும்,  சரசுவதி மகால் நூலகத் தமிழ் பண்டிதருமான மணி. மாறன் தெரிவித்தது:
கச்சமங்கலம் அணை குறித்து சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகையில் காணப்படுகிறது. இந்த அணை சுமார் 2,200 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். 
கரிகால்சோழன் காலத்துக்கு 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும். அப்பகுதியில் இருந்த நேரிமலையைப் பிளந்தும்,  பாறைகளை வெட்டி எடுத்தும் வெண்ணாற்றின் போக்கை மாற்றிப் பாசனத்துக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. 
இந்த அணையைச் சோழ மன்னன் சேந்தன் அழிசி கட்டினான். இப்பகுதியில் மலை இருந்ததற்கு அடையாளமாக கச்சமங்கலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு வரை பாறைகள் காணப்படுகின்றன. 
எனவே,  இந்த மலையை உடைத்துதான் இந்த அணையை உருவாக்கி இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த அணை 169.47 மீட்டர் நீளத்திலும், 2.41 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது. 
மேலும், 8 கண்கள் (நீர் செல்லும் பாதை) அமைக்கப்பட்டுள்ளன. வெண்ணாற்றில் வரும் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியதும் தென் கரை மதகு வழியாக ஆனந்த காவேரி வாய்க்காலில் பாய்ந்து கள்ளப்பெரம்பூர் ஏரிக்குச் செல்கிறது. இதேபோல, வடகரையில் உள்ள மதகு மூலம் பிள்ளைவாய்க்கால் வழியாக அள்ளூர் அழிசிகுடி ஏரிக்குச் சென்றடைகிறது. 
இந்த அணையின் மூலம் பிள்ளைவாய்க்கால் ஆயக்கட்டில் 11,023 ஏக்கரும்,  ஆனந்த காவேரி வாய்க்கால் ஆயக்கட்டில் 6,004 ஏக்கரும்,  மகாதேவபுரம் வாய்க்கால் ஆயக்கட்டில் 247 ஏக்கரும்,  திருப்பூர் வாய்க்கால் ஆயக்கட்டில் 60 ஏக்கரும் என மொத்தம் 17,334 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. 
இதில், வடகரை மதகு 16 -ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்க மன்னரால் செப்பனிடப்பட்டதாகக் கல்வெட்டுச் சான்று கூறுகிறது. 
ஆனால், காலப்போக்கில் இந்த அணையில் பராமரிப்பின்மைக் காரணமாக அடிப்பகுதியில் உள்ள பாறையில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் செல்கிறது. இதனால், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
இதையடுத்து, இந்த அணையைப் புனரமைக்கும் பணி மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. 
உலக வங்கி உதவியுடன் நீர் வளம்- நில வளம் திட்டத்தின்கீழ்,  இந்த அணையும், பிள்ளைவாய்க்காலும் ரூ. 6.06 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகின்றன. 
இதில், அணையில் கசிவு ஏற்படுவதைத் தடுக்கப் பழைமையை மாற்றாமல் நவீன முறையில் சீரமைக்கப்படுகிறது. 
இதற்காக முன்பக்கம் 3 மீட்டர் உயரத்துக்குத் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இப்பணி நிகழாண்டில் தண்ணீர் வருவதற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
மேலும்,  பிள்ளை வாய்க்காலில் சுமார் 3.8 கி.மீ. தொலைவுக்குக் கரையைப் பலப்படுத்துதல்,  8 மதகுகளைப் புதுப்பித்தல்,  படுக்கை,  சருக்கை தளம் அமைத்தல் போன்ற பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனப் பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆனால்,  கச்சமங்கலம் புனரமைப்புப் பணி மெதுவாக நடைபெறுவதாகவும்,  மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com