அண்ணா பல்கலை. தேர்வு முறைகேடு: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப முடிவு

அண்ணா பல்கலைக்கழக விடைத் தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை
அண்ணா பல்கலை. தேர்வு முறைகேடு: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப முடிவு


அண்ணா பல்கலைக்கழக விடைத் தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அந்த மாணவர்கள் ஒரு தாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் பட்சத்தில், அவர்களது பட்டங்களை ரத்து செய்யவும் பல்கலைக்கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தேர்வெழுதியவர்களில் 3.02 லட்சம் பேர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டது. மறு மதிப்பீட்டுக்குப் பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது. 
இதில் பெரும்பாலான மாணவர்கள் எழுதிய விடைகளுக்கான மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது.  இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட இணைப்புக் கல்லூரி பேராசிரியர்கள் கே.சுரேஷ், சி. குமார் சார்லி பால் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு எந்தவொரு கல்லூரியும் பணி வாய்ப்பு அளிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியது. 
அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த மேலும் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்,  இந்த முறைகேட்டில் பலனடைந்த வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை திரும்ப அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அவர்களுக்கு ஏற்கெனவே பட்டம் வழங்கப்பட்டிருந்தாலும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பட்டத்தை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com