ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை: எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல்வேறு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை: எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறுவோரின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 150 மதிப்பெண்களுக்கானத் தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. மற்ற கேள்விகள் பொது அறிவு, திறன் அறிவு தொடர்பாக உள்ளன. இதன் காரணமாக, பிரதான பாடத்துக்கான கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்க முடியாதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90-ஐ பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறும் நிலை உள்ளது. இந்தத் தேர்வுகளும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில், வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோன்று தேசிய அளவில் நடத்தப்படும் நெட் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டும் 7 ஆண்டு நிர்ணயம் செய்வது சட்டவிரோதமானது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கும் நிரந்தரச் சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். 
இந்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில், ஏற்கெனவே ஆயிரத்து 500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் தேர்வெழுத காத்துக் கொண்டிருக்கின்றனர். 
இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது. அரசும் கேள்வித்தாளை வடிவமைக்கும் நிபுணர்கள் குழுவும் தான் அதை நிர்ணயம் செய்ய முடியும் என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com