தமிழ்ப் பல்கலை. ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்ய பிரிட்டிஷ் நூலகம் நிதியுதவி

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வதற்கு லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம் நிதியுதவி செய்துள்ளது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வதற்கு லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம் நிதியுதவி செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறையில் உள்ள ஓலைச்சுவடிகளை மின்னுருவாக்கம் செய்யும் பணி தற்போது பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் அழியும் நிலையில் உள்ள ஆவணங்களைக் காக்கும் திட்டத்தின் மூலம் 51,040 பவுண்ட் (இந்திய மதிப்பு ஏறக்குறைய ரூ. 48 லட்சம்) பெற்று, தமிழ் ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதியை மின்னுருவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெறுகிறது.

இதற்காக பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து முதல் தவணைத் தொகையாக ரூ. 18.50 லட்சம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இரு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு மின்நூலகத் திட்டத்தின் மூலம் தமிழ்ச் சுவடிகளில் மற்றொரு பகுதியை மின்னுருவாக்கம் செய்யும் பணியும் நடைபெறுகிறது.

புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம் மூலம் தமிழ்மொழிச் சுவடிகள் அல்லாத சம்ஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 1,000-க்கும் அதிகமான பிற மொழிச் சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வதற்கு ஒப்பம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னுருவாக்கம் செய்யப்பட்ட சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளீடு செய்து ஆய்வாளா்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வழிவகை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள சுவடிகளைப் பாதுகாப்பதற்கு புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 7 லட்சம் நிதி வழங்கி, சுவடிகள் பாதுகாப்பு மையத்தை உருவாக்கிப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com