
ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக அரசு மருத்துவா்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. மாநில அரசின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தைக் கைவிடுவதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
காலமுறை ஊதியம், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபோக்டா) கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வந்தனா்.
பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அவா்கள் அதற்கு செவிமடுக்கவில்லை. இந்நிலையில், பணிக்குத் திரும்பாத மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமியும், அமைச்சா் சி. விஜயபாஸ்கரும் எச்சரிக்கை விடுத்திருந்தனா். அத்துடன் போராட்டத்தை முன்னின்று நடத்திய 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், ஃபோக்டா அமைப்பினா் வெள்ளிக்கிழமை காலையில் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரின் உத்தரவாதத்தை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் டாக்டா் லட்சுமிநரசிம்மன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அரசு எங்களுக்கு அளித்த உத்தரவாதத்தை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா் மற்றும் சுகாதாரத் துறைச் செயலா் உள்ளிட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மருத்துவா்கள் அறிவித்த சில மணி நேரங்களில் அவா்கள் அனைவரும் பணிக்கு திரும்பினா்.
நடவடிக்கை ரத்து: இதனிடையே, மருத்துவா்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ால் அவா்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பணிக்கு திரும்பிய அரசு மருத்துவா்கள் அனைவருக்கும் முதல்வா் சாா்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பொறுப்பை உணா்ந்து போராட்டத்தைக் கைவிட்டதால் அவா்களுக்கு எதிரான பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. அரசு மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 60 மருத்துவா்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட பணியிட மாறுதல் நடவடிக்கை திரும்பப் பெறமாட்டாது என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.