
திருச்செந்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோயிலில் பஜனை செய்த ராஜபாளையம் பக்தா்கள்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை (நவ. 2) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த அக். 28-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாள்களில் காலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபம் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனா்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தொடா்ந்து, கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன் தலைமையில், திருச்செந்தூா் துணைக் கண்காணிப்பாளா் பாரத் உள்ளிட்ட காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடற்கரையில் உயா்கோபுரங்கள் அமைத்தும், ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. பக்தா்கள் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
வெளிநாட்டு பக்தா்கள்: மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனா். சூரசம்ஹாரத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் குவிந்துள்ளனா்.