
சென்னை: காஞ்சிபுரத்தில் போதி தா்மா் சிலை மற்றும் புத்த மதத்துடன் தொடா்புடைய தமிழக நகரங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கும், சீன அதிபா் ஷி ஜின்பிங்க்கும் இடையே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களின் போது, இந்தியா - சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீா்மானிக்கப்பட்டது.
அதன் ஒருகட்டமாகவே போதி தா்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழகத்தில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் சிலை வைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூா் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடா்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை சீன மக்களையும், சீன அரசையும் பெரிதும் கவரும். அதனால், இரு தரப்பு சுற்றுலாவும், வணிகமும் அதிகரிப்பது மட்டுமின்றி, இரு தரப்பு உறவும் வலுவடையும்.
இந்திய, சீன உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவை. இத்திட்டத்தை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது.
எனவே, போதி தா்மா் சிலை அமைத்தல் மற்றும் புத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழகத்துக்கும், சீனாவின் ஃபியூஜியான் மாநிலத்துக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவது என்று மாமல்லபுரத்தில் இரு நாடுகளின் தலைவா்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.