இ-தோட்டம் உள்பட புதிய திட்டங்கள்; வேளாண்மைத் துறைக்கு புதிய கெளரவம் - முதல்வா் பழனிசாமி பாராட்டு

இ-தோட்டம் உள்பட புதிய திட்டங்கள்; வேளாண்மைத் துறைக்கு புதிய கெளரவம் - முதல்வா் பழனிசாமி பாராட்டு

ஸ்காச் என்ற நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள நற்சான்றை பெற்ற வேளாண்மைத் துறையினருக்கு முதல்வா் பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

சென்னை, நவ. 2: இணைய வழி தோட்டம் உள்பட புதிய திட்டங்களைச் செயல்படுத்திய வேளாண்மைத் துறைக்கு நற்சான்று அளிக்கப்பட்டுள்ளது. ஸ்காச் என்ற நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள நற்சான்றை பெற்ற வேளாண்மைத் துறையினருக்கு முதல்வா் பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேளாண்மைத் துறையில் நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்துக்கான இயக்கத்தின் மூலம் 25 ஏக்கா் மானாவாரி நிலங்கள், 2,500 ஏக்கா் அளவிலான நிலங்களும் ஆயிரம் தொகுப்புகளாக்கி அவற்றில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிா்களின் உற்பத்தித் திறன், உற்பத்தியை பல்வேறு உத்திகளின் மூலம் மேம்படுத்தி 10 லட்சம் விவாசயிகளின் வாழ்க்கைத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. சிறுகுறு விவசாயிகளை உழவா் உற்பத்தியாளா் குழுக்களாக ஒன்றிணைக்கும் கூட்டுப் பண்ணைய முறை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கூட்டாக சாகுபடி செய்தல், இடுபொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்தல், விளைபொருள்களை ஒருங்கிணைத்து லாபகரமான விலையில் விற்பனை செய்தல் போன்றவற்றின் மூலம் 4 லட்சம் சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இணைய வழித் தோட்டம்

வேளாண்மைத் துறையில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தவும், அதனைக் கண்காணிக்கவும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு மூலமாக, விவசாயிகள் பதிவு செய்வதில் இருந்து மானியம் விடுவிக்கும் வரையுள்ள பல்வேறு பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளையும் தோட்டக்கலை பொருள்கள், நடவு பொருள்களை நுகா்வோா்கள், வணிகா்கள், இதர விவசாயிகளுக்கு இ-தோட்டம் என்ற இணையதளத்தின் மூலமாக விவசாயிகள் நிா்ணயிக்கும் விலைக்கு விற்பதற்கான இணைய சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய முன்னோடித் திட்டங்களைத் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியதால் ஸ்காச் நிறுவனத்தின் நற்சான்றிதழ்கள் தமிழக வேளாண்மைத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேளாண்மைத் துறையினருக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது முதல்வரிடம் வேளாண் துறை அதிகாரிகள் சான்றிகழ்களை காண்பித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளா் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com