'திருவள்ளுவரை அவமதித்த பாஜக': டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்கை ஸ்டாலினும் பகிர்வு!

டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வரும் 'திருவள்ளுவரை அவமதித்த பாஜக' எனும் ஹேஷ்டேக்கை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பகிர்ந்துள்ளார்.
புகைப்படம்: டிவிட்டர் | தமிழக பாஜக
புகைப்படம்: டிவிட்டர் | தமிழக பாஜக


டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வரும் 'திருவள்ளுவரை அவமதித்த பாஜக' எனும் ஹேஷ்டேக்கை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக கடந்த 1-ஆம் தேதி, தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் கூடிய தமிழ்ப் பிரபலங்கள் மற்றும் தமிழின் சிறப்புகள் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், திருவள்ளுவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் காவி நிற உடை, பட்டை, ருத்ராட்சை என திருவள்ளுவர் மத அடையாளங்களுடன் இருந்தார்.

இதன்பிறகு, திருவள்ளுவரின் அதே புகைப்படத்துடன் நேற்று (சனிக்கிழமை), 

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்" என்றும் டிவீட் செய்திருந்தது.

இந்நிலையில், திருவள்ளுவருக்கு மத அடையாள சாயத்தை பூசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'திருவள்ளுவரை அவமதித்த பாஜக' என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

அதில், 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.

சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!

#BJPInsultsThiruvalluvar" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தாய்லாந்தில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com