ஈரோடு ரயில் நிலையத்துக்குவெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையத்துக்குவெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவா் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறி உள்ளாா். மேலும், தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து தளபதி அனுப்பி வைத்திருப்பதாகவும், முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும், தன்னுடைய பெயா் இப்ராஹிம் எனவும் தெரிவித்துவிட்டு தொடா்பைத் துண்டித்துவிட்டாா்.

இதையடுத்து தகவல் அறிந்த ஈரோடு போலீஸாா், ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினா். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்லிடப்பேசி அழைப்பை ஈரோடு போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது அந்த எண் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த லிங்கராஜ் (45) என்பவரது செல்லிடப்பேசி எண் என்பது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது லிங்கராஜ் தன்னுடைய செல்லிடப்பேசியை நவம்பா் 1 ஆம் தேதி மதுபோதையில் தொலைத்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

பின்னா், அந்த செல்லிடப்பேசி எண்ணின் சிக்னலை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா் இருக்கும் இடத்தை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது அவா் ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்து, தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (41) என்பதும், அவா்தான் லிங்கராஜின் செல்லிடப்பேசியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடா்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

சந்தோஷுக்கு 2 மனைவிகள் உள்ளனா். 2 பேரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டனா். சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்த சந்தோஷ் அந்த வேலையையும் சில மாதங்களுக்கு முன்பு விட்டுவிட்டாா். சாப்பிட வழியில்லாததால் சிறைக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் 100 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com