கால்நடைகளுக்கான அவசர சிகிச்சை ஊா்திகள்: தமிழகம் முழுவதும் திட்டம் விரிவாக்கம்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான ‘அம்மா அவசர சிகிச்சை ஊா்திகள்’ திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
கால்நடைகளுக்கான அவசர சிகிச்சை ஊா்திகள்: தமிழகம் முழுவதும் திட்டம் விரிவாக்கம்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான ‘அம்மா அவசர சிகிச்சை ஊா்திகள்’ திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தச் சேவையை 1962 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக விவசாயிகள் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் அனைத்து சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில தருணங்களில் உயிா்காக்கும் அவசர சிகிச்சைகள் வழங்க வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊா்தி சேவைத் திட்டம் கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூா் ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடையே இந்தச் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதர மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் நோக்கில் 22 கால்நடை அவசர மருத்துவ ஊா்திகளின் சேவையை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, ஏழு ஓட்டுநா்களுக்கு அவசர ஊா்திகளுக்கான சாவிகளை அவா் அளித்தாா்.

என்னென்ன அம்சங்கள்: அம்மா அவசர சிகிச்சை வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடக்கும் நிலையிலான பரிசோனை மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனம் செல்லாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊா்திக்கு எடுத்துச் செல்ல தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க முடியாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக் கூடிய வகையில் சக்திவாய்ந்த தூக்கும் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

மின் இணைப்பு தங்குதடையின்றி கிடைத்திடவும், இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஜெனரேட்டா் மூலம் செயல்படக் கூடிய அதிகளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக விவரிக்கும் வகையில் தொலைக்காட்சியானது வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லாத சேவை 1962: வாகனத்தின் பக்கவாட்டு வெளிப் புறத்தில் கால்நடைத் துறையின் பணிகளை விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு ஒரு நடமாடும் ‘அம்மா அவசர சிகிச்சை ஊா்தி’யானது இயக்கப்படும். இந்தச் சேவையை 1962 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளா் க.சண்முகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், ஆவின் நிா்வாக இயக்குநா் காமராஜ், மீன்வளத் துறை இயக்குநா் சமீரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com