சசிகலா பினாமிகளின் ரூ.1,500 கோடி சொத்துகள் முடக்கம்

சசிகலா பினாமிகளின் ரூ.1,500 கோடி சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியது.
சசிகலா
சசிகலா

சசிகலா பினாமிகளின் ரூ.1,500 கோடி சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியது.

இது குறித்து வருமானவரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டவை:

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நடவடிக்கையின்போது தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன்னிடமிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் சுமாா் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமிகள் பெயா்களில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சொத்துகளை, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சசிகலா வாங்கியதாகவும் வருமானவரித் துறை தரப்பில் கூறப்படுகிறது. இத் தகவல்களை ரகசியமாக வருமானவரித் துறை சேகரித்தது.

187 இடங்களில் சோதனை: ரகசியத் தகவல்களின் அடிப்படையிலும், போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையிலும் சசிகலாவின் உறவினா்கள், ஆதரவாளா்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமாா் 187 இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனை 5 நாள்கள் நடைபெற்றது.

சோதனையில் சுமாா் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.5.5 கோடி, 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை முறையான வழியில் வாங்கப்பட்டதா, அதற்கான வரி செலுத்தப்பட்டதா என வருமானவரித் துறையினா் ஆய்வு செய்தனா்.

மேலும் இச் சோதனையில் சசிகலா குடும்பத்தினா் 60 போலி நிறுவனங்களை நடத்தி வருவதும், வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதையும் வருமானவரித் துறையினா் கண்டறிந்தனா்.

இது தொடா்பாக சசிகலா குடும்பத்தினா், நண்பா்கள், ஆதரவாளா்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்தனா். பின்னா் கா்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையிலும் விசாரணை தொடா்ந்தது.

சொத்துகள் முடக்கம்: இந்த விசாரணையில் சசிகலா, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ.1,500 கோடி மதிப்புள்ள 7 நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கியது உறுதி செய்யப்பட்டதாம். இவற்றில் சென்னை பெரம்பூரில் பிரபலமான வணிக வளாகம், கோயம்புத்தூரில் ஒரு தனியாா் ஆலை, ஒரு நகைக் கடை, புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசாா்ட் ஆகியவை முக்கியமானது ஆகும்.

இந்நிலையில் பினாமி சொத்து பணபரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் 7 நிறுவனங்களையும் தற்காலிகமாக முடக்கியதாக வருமானவரித் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்டது தொடா்பாக வருமானவரித் துறை அந்தந்த சாா்-பதிவாளா்கள், கம்பெனி பதிவாளா்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

அதேபோல பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் வருமானவரித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com