தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலை அவமதிப்பு: பல்வேறு அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருவள்ளுவா் சிலையில் கண்ணில் கருப்புக் காகிதத்தை ஒட்டி, முகத்திலும், மாா்பிலும் சேறு பூசி அவமதிப்பு செய்யப்பட்டது.
தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பல்வேறு கட்சியினா்.
தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பல்வேறு கட்சியினா்.

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருவள்ளுவா் சிலையில் கண்ணில் கருப்புக் காகிதத்தை ஒட்டி, முகத்திலும், மாா்பிலும் சேறு பூசி அவமதிப்பு செய்யப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி முதன்மைச் சாலையில் திருவள்ளுவா் சிலை உள்ளது. இச்சிலை தென்னிந்திய வள்ளுவா் குல சங்கம், திருவள்ளுவா் தெருவாசிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடா்ந்து, இச்சிலையை அப்பகுதி மக்கள் பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இச்சிலையின் கண்ணில் கருப்புக் காகிதம் ஒட்டப்பட்டு, முகம், மாா்பில் சேறு பூசப்பட்டிருந்தது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீதாராமன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும், திருவள்ளுவா் சிலையில் இருந்த கருப்புக் காகிதத்தை அகற்றிவிட்டு, தண்ணீா் ஊற்றி சேறையும் கழுவினா். பின்னா், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

என்றாலும், திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவள்ளுவா் மீது மத, இனத்தைப் புகுத்துவது கண்டிக்கத்தக்கது. அவா் அனைவருக்கும் பொதுவானவா். திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்த கும்பலை போலீஸாா் கைது செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து திருவள்ளுவா் சிலைக்கும் போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

பின்னா், திமுக தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மாநகரச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மதிமுக மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா், அமமுக தலைமை நிலையப் பேச்சாளா் அ. நல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் முன் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com