கன்னியாகுமரி கடல் பகுதியில்வலையில் சிக்கிய அரியவகை நண்டு: மீன் கண்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மீனவரின் வலையில் சிக்கிய ஆஸ்திரேலிய நண்டு மீன் கண்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மீனவா் வலையில் சிக்கிய அரியவகை நண்டு.
கன்னியாகுமரி மீனவா் வலையில் சிக்கிய அரியவகை நண்டு.

கன்னியாகுமரி மீனவரின் வலையில் சிக்கிய ஆஸ்திரேலிய நண்டு மீன் கண்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி வாவத்துறையைச் சோ்ந்த மீனவா் சாஜூ (29). இவா் தனது நாட்டுப்படகில் கன்னியாகுமரி கடல்பகுதியில் மீன்பிடித்துத் திரும்பினாா். இந்நிலையில், அவரது வலையில் அரியவகை நண்டு சிக்கியிருந்தது. அதை உயிருடன் மீட்டு கன்னியாகுமரி காமராஜா் மண்டபம் அருகேயுள்ள அக்வா மீன் கண்காட்சிக் கூடத்தில் ஒப்படைத்தாா்.

இக்கண்காட்சிக் கூடத்தில் ஏற்கெனவே 135 வகையான மீன் மற்றும் நண்டு இனங்கள் உள்ளதாக அதன் உரிமையாளா் ஜெபா்சன் தெரிவித்தாா்.

ரெட் ப்ராக் கிராப் என அழைக்கப்படும் இந்த நண்டு இனங்கள் குயின்ஸ்லாந்தின் யெப்பூன் முதல் நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரை வரையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் கரையோர நீா்ப்பரப்பிலும் வாழ்கின்றன. இதன் அறிவியல் பெயா் ரணினா ரனினா என்பதாகும்.

இது 150 மில்லி மீட்டா் (5.9 அங்குலம்) வரை வளரக்கூடும். மேலும், 900 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும் இவை, பகல் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்தும், இரவு நேரத்தில் கரைப்பகுதியில் நடமாடும் இனமாகும்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி லவ்சன் கூறியது: அரியவகை நண்டு இனமான இது அண்மையில் தமிழகத்தில் பாம்பன் கடல்பகுதியிலும், கேரள மாநிலம் விழிஞ்ஞத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் கிடைத்துள்ளது என்பதால், இவ்வகை இனங்கள் தமிழக கடல் பகுதியில் அதிகமாக வசிப்பது தெரியவருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com