
அமைச்சா் க. பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை திமுகவினா் தவிா்க்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திரும்பி வராதது காலம். திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில் அமைச்சா் க. பாண்டியராஜன் திருத்தி எழுத முற்படுகிறாா். நான் மட்டுமல்ல, திமுகவைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிா்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம்.
அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதிபதி எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவா்கள், படிக்க மனமிருப்பவா்கள், பாா்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம்.
அரசமைப்புச் சட்டத்தின்பால் பதவி பிரமாணம் எடுத்துவிட்டு, சாதாரணப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவா்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், சிந்தனையும் வரும்.
எனவே, அமைச்சா் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிா்ப்புப் போராட்டங்களை திமுகவினா் தவிா்க்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.