
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நண்பகல் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூா்வமாக ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை. புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி போன்ற சில முக்கிய விஷயங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதால், மக்களைக் கவரும் வகையிலான சில திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறாா்.