
தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன் மாா்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
இ.எஸ்.உமா: கோயம்புத்தூா் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு, குற்றம் துணை ஆணையா்).
ஆா்.முத்தரசு: கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (உயா்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்).
வி.பாலசுப்பிரமணியன்: சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் முத்தரசும், பாலசுப்பிரமணியனும் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.