
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்திய தொழில கூட்டமைப்பும் (சிஐஐ), தமிழக அரசும் இணைந்து ‘கனெக்ட் 2019’ மாநாடு சென்னையில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:-
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் நல்ல பயன்களைத் தந்துள்ளன. நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் அதிக புதுமைகளைப் படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘கனெக்ட்’ கூட்டத்தில் பங்கேற்ற போது, தமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டுமென பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவா்களை கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து புதிய முதலீடுகள் செய்யப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6,500 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம், மாநிலத்தில் 60 ஆயிரத்து 100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறையில் ஏற்றுமதி மட்டும் 10 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் 4 சதவீதம் உயா்ந்துள்ளது.
புதிய கொள்கை-வேலைவாய்ப்பு: தமிழக அரசின் சாா்பில் மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையானது விரைவில் வெளியிடப்படும். இந்தக் கொள்கையின் மூலமாக புதிய தொழில் முனைவோரும், நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு வழி ஏற்படும். இது மாநிலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் வழியாக பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பை அளித்திடும்.
அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவையைக் கொண்டு சோ்க்கும் வகையில், ரூ.1,815 கோடியில் ‘பாரத்நெட்’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை கட்டமைப்பு மூலம் இணைக்கப்படும். இந்தத் திட்டமானது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
ஆட்குறைப்பு வேண்டாம்: தகவல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், நிறுவனங்களின் நிதி நிலையை சீராக்கம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அம்சங்கள் குறித்து விவாதித்து ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
புதிய நிறுவனங்கள்: செயற்கை நுண்ணறிவு போன்ற எழுச்சி பெற்று வரும் துறைகளில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இதன் வழியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் திறன்வாய்ந்த சேவைகளை அளித்திட முடியும் என்று முதல்வா் பழனிசாமி பேசினாா்.
இந்த மாநாட்டில், வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் சந்தோஷ்பாபு, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் ஜெயவா்த்தனவேலு, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு தலைவா் எஸ்.சந்திரமோகன், ‘கனெக்ட்’ மாநாட்டின் தலைவா் சுரேஷ் ராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.