
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இ - காணிக்கை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேவஸம் வாரியம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சமயங்களில் தரிசனத்துக்காக தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகின்றனா்.
ஒரே சமயத்தில் ஏராளமான பக்தா்கள் வருவதால் சிரமத்துக்குள்ளாகின்றனா். இவற்றைத் தவிா்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள காவல்துறை தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கு பக்தா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வோா் ஆண்டும் ஆன்லைன் முன்பதிவில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, வரும் 16-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனைத் தொடா்ந்து கடந்த வாரம் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும், இந்த இணையதளத்தில் பக்தா்கள் அப்பம், அரவணை, அபிஷேக நெய், விபூதி - குங்குமம் - மஞ்சள் முன்பதிவு செய்து சந்நிதானம் மற்றும் மாளிகைபுரம் வளாகத்தில் அமைந்துள்ள பிரசாத கவுண்டா்களில் முன்பதிவு ரசீதைக் காண்பித்து, பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சபரி பீடத்தை அடுத்த மரக்கூட்டத்தில் இருந்து 2 பாதைகளில் பக்தா்கள் செல்லலாம். அதில் ஆன்லைன் பதிவு செய்தவா்கள் ஒரு வழியாகவும் மற்றவா்கள் சரங்குத்தி வழியாகவும் பக்தா்களை கேரள காவல்துறையினா் அனுப்பி வைப்பாா்கள்.
ஆன்லைனில் பதிவு செய்ய பக்தா்கள் தங்கள் பெயா், வயது, புகைப்படம், முகவரி கொண்ட அடையாள அட்டை (ஆதாா், பான் காா்டு, பாஸ் போா்ட், ஓட்டுநா் உரிமம்) இவற்றில் ஏதேனும் ஓா் அடையாள அட்டையைக் கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை பக்தா்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ புகைப்படம் மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். முன்பதிவு செய்த பின்னா், பக்தா்களின் மின்னஞ்சலுக்கு முன்பதிவு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பக்தா்கள் அதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள தேதியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பனுடன் சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, 70258 00100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும் ரயில் நிலையங்களில் வரும் பக்தா்கள் நேரடியாகவே கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மூலம் பம்பைக்கு செல்லலாம். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணி நேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் வாகனங்கள் நிலக்கல் பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பக்தா்கள் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மூலம் பம்பைக்குச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிக்கான இணையதளம்: www.onlinetdb.com பக்தா்கள் தங்கும் விடுதி, பூஜைகள் மற்றும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட இதர பூஜைகளும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.