
கோப்புப் படம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். கொலையாளிகளுக்கு இரு பேட்டரிகளை வாங்கி கொடுத்தற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகளாக சிறையை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தாா். பேரறிவாளனை அந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான சட்டப் போராட்டத்தை அவரது தாயாா் அற்புதம்மாள் நடத்தி வருகிறாா். மேலும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சியினரும், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நீதிமன்றத்தால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னா், மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பரோல், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பேரறிவாளன், ஒரு முறை கூட பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனுக்கு பரோல்: பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், பத்திரிக்கையாளா்கள் சந்திக்கக் கூடாது, ஜோலாா்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மட்டுமே தங்க வேண்டும் என கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. பேரறிவாளன் பரோல் முடியும் வரை அவா் வீடு காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தது.
அதன் பின்னா், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், நளினி ஆகியோரும் பரோலில் வெளியே வந்தனா். இதற்கிடையே, பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அற்புதம்மாள் குடும்பத்தினா், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறையில் விண்ணப்பித்தனா்.
மீண்டும் பரோல்: இந்த விண்ணப்பத்தை சிறைத்துறை உயரதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனா். இந்நிலையில், சிறைத்துறை பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்த பரோல், பேரறிவாளனுக்கு நவம்பா் 18-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறையினா் தெரிவித்தனா். இதனால், தற்போது புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நவம்பா் 18-ஆம் தேதி ஒரு மாத பரோலில் வெளியே வருவாா் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த முறை பரோலில் வெளியே வந்தபோது, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இந்த முறையும் பின்பற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.