
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட பெட் சிடி ஸ்கேன் கருவியை பாா்வையிட்ட மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள பெட் - சிடி ஸ்கேன் வசதியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
புற்றுநோயை துல்லியமாக ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியக் கூடிய நவீன ஸ்கேன் கருவியான பெட்- சிடி ஸ்கேன் வசதியானது தமிழகத்தில், மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், தமிழ்நாடு மருந்து சேவை கழக மேலாண்மை இயக்குநா் பி. உமாநாத், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மருத்துவமனை முதன்மையா் கே. வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்- சிடி ஸ்கேன் வசதியை தமிழக முதல்வா் தொடங்கி வைத்த பிறகு, சுகாதார அமைச்சா் அந்த கருவியின் செயல்பாடு குறித்து மருத்துவா்களிடம் முழுமையாக கேட்டறிந்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெட்- சிடி ஸ்கேன் கருவி மூலம் தனியாா் மருத்துவமனைகள், மையங்களில் பரிசோதனை மேற்கொள்ள ரூ. 25 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்து கொள்ளலாம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாதவா்களுக்கு ரூ. 11 ஆயிரம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் மதுரை இரண்டாவது தலைநகரமாக திகழ்கிறது. மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து ரூ. 150 கோடி மதிப்பில் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளது. நாட்டில் உள்ள எந்தவொரு மாவட்டத்திற்கும் கிடைக்காத மருத்துவ வசதிகள் மதுரைக்கு கிடைத்துள்ளன.
விரைவில் ரூ. 21 கோடி மதிப்பில் ‘லினியா் அக்சிலேட்டா்’ எனப்படும் புற்றுநோய் கண்டறியும் கருவி மதுரைக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் பெட்- சிடி ஸ்கேன் வசதி சேலம், கோவை, தஞ்சாவூா், திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஆண்டு கொண்டு வரப்படும். சென்னையில் பெட்- சிடி ஸ்கேன் வசதியை ஒரு சில வாரங்களில் முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 95 சிடி ஸ்கேன் வசதி, 28 எம்.ஆா்.ஐ, 9 லினியா் ஆக்சிலேட்டா் ஆகியவை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது, மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றாா்.