காலையில் நீங்கள் பார்ப்பது பனிமூட்டமல்ல; புகை மூட்டம்: அது நம்மை என்ன செய்யும் தெரியுமா?

கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மோசமான புகை மூட்டம் காணப்படுகிறது. அதே சமயம், சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாகக் குறைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நிலவும் புகைமூட்டம்
சென்னையில் நிலவும் புகைமூட்டம்


கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மோசமான புகை மூட்டம் காணப்படுகிறது. அதே சமயம், சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாகக் குறைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிலை நவம்பர் 14ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பருவ மழை தீவிரம் பிடித்தால்தான் மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார். தில்லியை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு, சென்னையைத் தாக்கும் என்று. ஆனால் அதற்கு வானிலை ஆய்வு மையம் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கும்  போதே, சென்னை உள்ளிட்ட கடற்கரையோர நகரங்களில் புகை மூட்டம் பரவியுள்ளது. இதுதான், காலை நேரத்தில் நாம் காணும் புகை மூட்டத்துக்குக் காரணம்.

சென்னையில் நிலவும் காற்று மாசுபாடே பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றால் தில்லியில் நிலவும் காற்று மாசினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இதுவரை நாம் கவனம் செலுத்தவில்லை என்றே கருதுகிறோம்.

வாராணசியில் கோயில் ஒன்றில் சுவாமி சிலைகளுக்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது நேற்று வைரலானது. காற்று மாசு, தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை என்று கூறும் அதே வேளையில், மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது பூசாரிகளின் இந்த செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையை சூழ்ந்து கொண்டிருக்கும் காற்று மாசு தொடர்பாக முன்னாள் சென்னை மாநகர சுகாதாரத் துறை அதிகாரி குகனந்தம் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னையில் திங்கட்கிழமை முதல் புகை மூட்டம் காணப்படுகிறதே? இது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?

காற்றின் தரம் குறைய ஆரம்பித்ததுமே நமது உடல் அதற்கு எதிர்வினையை உடனடியாக காண்பித்துவிடும். ஏன் என்றால், காற்றுக்கும் நமக்கும் இருக்கும் நேரடித் தொடர்புதான். பலருக்கும் தோல் அரிப்பு, கண்களில் அல்லது மூக்கில் நீர் வடிதல், தொண்டை அடைப்பு, செஞ்சு மற்றும் மூக்கில் எரிச்சல் அல்லது அடைப்பு போன்றவை ஏற்படும். இதில் பிரச்னை என்னவென்றால் ஏற்கனவே தோல் அரிப்பு அல்லது அலர்ஜி போன்றவை இருப்பவர்களுக்கு இது மேலும் தீவிரமாக்கும். முதலில் குழந்தைகளும், முதியவர்களுமே கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மூச்சு விட சிரமம் ஏற்படும்.

இது தவிர வேறு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

காற்று மாசினால் உடனடியாக அல்லாமல் வேறு சில நாட்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் போது ஆஸ்துமா இல்லாதவர்களுக்குக் கூட ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு இரவில் வறண்ட இருமல் பாதிப்பும் ஏற்படலாம். இந்த இருமல் தீவிர இருமலாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

காற்று மாசினில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

பருத்தி ஆடைகளால் உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் கண்ணாடி அணியலாம். முகக்கவசம் அணிவதும் நல்லதுதான். ஆனால், சாதாரண முகக் கவசம் அந்த அளவுக்கு பலனளிக்காது. பிரச்னை தீவிரமாக இருப்பவர்கள் என்-92 ரக முகக் கவசத்தை மருந்துக் கடைகள் அல்லது மருத்துவமனைகளில் வாங்கி அணியலாம். மக்கள் வெளியிடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கலாம்.

காற்றின் தரம் குறையும் போது அரசு என்ன செய்ய வேண்டும்?

மோசமான நகரமைப்புத் திட்டத்தின் காரணமாகவே காற்று மாசு அதிகரிக்கிறது. சாலைகளின் அகலம், ஒரு கட்டடத்துக்கும், மற்றொரு கட்டடத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவை காற்று மாசு பிரச்னையில் எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த சமயத்தில், அரசு சில புள்ளி விவரங்களைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் காற்று மாசைக் கட்டுப்படுத்த திட்டமிட முடியும். காற்றின் தரம் குறித்து ஒரு நீண்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும். காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு, கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, இதர ரசாயனங்கள் எவ்வளவு என கண்டறிய வேண்டும்

சென்னைக்கு மேலே எந்த அளவுக்கு புகை மண்டலம் ஊடுருவி இருக்கிறது என்பதை செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்கு மேலே 5 கி.மீ. அளவுக்கு புகைப்படலம் படர்ந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

தற்போதே, சென்னையில் வாகன நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்றின் தரம் குறைய வாகனப் புகையும் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. மேலும் சில பிரச்னைகளையும் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com