கோவையில் இரட்டைக் கொலை வழக்குக் குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

கோவையில் 2010ம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு  தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 
கோவையில் இரட்டைக் கொலை: சீராய்வு மனு தள்ளுபடி
கோவையில் இரட்டைக் கொலை: சீராய்வு மனு தள்ளுபடி


புது தில்லி: கோவையில் 2010ம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு  தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கோவையில் 2010ம் ஆண்டு பள்ளியில் பயின்று வந்த சிறார்களான அக்கா, தம்பியைக் கடத்திச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இருவரையும் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி உறுதி செய்தது.

இதனை மறு சீராய்வு செய்யக் கோரி குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. இதையடுத்து, குற்றவாளியின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து குற்றவாளி முன்பு இருக்கும் மற்றொரு வாய்ப்பு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்புவதாக உள்ளது.

2010ம் ஆண்டு, சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியதும், குற்றவாளிகளில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பரவலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டதும் பலருக்கும் நினைவிருக்கலாம்.

கோவையில், பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனைகளையும் விதித்தற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் உறுதி செய்தது.

சிறுமி மற்றும் அவரது தம்பி ரித்திக்கைக் கடத்திச் சென்ற மனோகரனும், மோகனகிருஷ்ணனும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இரண்டு பேரையும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றவாளிகளில் ஒருவரான மோகனகிருஷ்ணன் காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

வழக்கு விசாரணை முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு உறுதி செய்யப்படுவதாக ஒரே வாக்கியத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதன் மூலம், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு எந்த கருணையும் காட்டப்படாது, இது பிறருக்கும் பாடமாக அமையும் என்பதையும், தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் ஒரே வாக்கியத்தில் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com