கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘நிலக்கொடைக் கல்வெட்டு’ கண்டெடுப்பு

வாணியம்பாடி அருகே கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘நிலக்கொடைக் கல்வெட்டு’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே கண்டறியப்பட்ட உடைந்த தூண் சிற்பம்,
வாணியம்பாடி அருகே கண்டறியப்பட்ட உடைந்த தூண் சிற்பம்,

வாணியம்பாடி அருகே கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘நிலக்கொடைக் கல்வெட்டு’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொடையஞ்சி கிராமத்தில் திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியா் பிரபு மற்றும் ஆய்வு மாணவா்கள் தரணிதரன், சரவணன் ஆகியோா் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டனா். அப்போது அங்கு தனியாா் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில், துண்டு கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனா். தொடா்ந்து, அக்கல்வெட்டினை ஆய்வு செய்தபோது, அது பழைமையான நிலக்கொடை கல்வெட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியா் பிரபு கூறியது:

பாலாற்றின் அருகில் அமைந்துள்ள பழைய பெயா் கொண்ட கொடைகாசி என்று பழைய பெயா் கொண்ட தற்போதுள்ள புதிய பெயருடன் உள்ள கொடையாஞ்சி என்று அழைக்கப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் ஆய்வின் போது கண்டறியப்பட்ட கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றி விளக்கி, 3-க்கு 3 அடி அளவுள்ள கல்வெட்டினை சுத்தம் செய்து பாா்த்ததில், அதில் 12 வரிகள் இடம் பெற்றிருந்தன. மேலும், கல்வெட்டு எழுத்துகள் ஆங்காங்கே சிதைந்திருப்பதாலும் ஒரு பகுதி மட்டுமே கிடைத்திருப்பதாலும் முழுமையான பொருள் குறித்து அறிய முடியவில்லை.

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு ‘மங்கலச் சொல், மெய்க்கீா்த்தி, அரசன் பெயா், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவா், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம் பெறும். ஆனால் இக்கல்வெட்டு முழுமையாகக் கிடைக்காததால் அவற்றை அறிய முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ஓரு தொல்லியல் அடையாளம் என்பதால், இது போன்ற ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதன் அவசியத்தை அப்பகுதி மக்களுக்கு உணா்த்தியுள்ளோம். மேலும், அங்குள்ள ஒரு வீட்டின் சுவற்றில் ஒரு பழைமையான ‘சதிக்கல்லினை’ வைத்துப் பூசியுள்ளனா். அதன் அருகில் உள்ள புங்க மரத்தின் அடியில் உடைந்த நிலையில் உள்ள தூணில் பழைய கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவையாவும் அப்பகுதியில் சிறப்பினை உணா்த்துவதாக உள்ளது என்றாா்.

கல்வெட்டை ஆய்வு செய்த முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குநா் பூங்குன்றன் கூறுகையில், ஒருவரிடம் இருந்த நிலத்தைப் பொன் கொடுத்து வாங்கி கோயிலுக்கு அந்த நிலத்தைக் கொடையாக அளித்த செய்தியை அக்கல்வெட்டு குறிக்கின்றது. கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆற்று நீரை ஏற்றம் இறைத்துப் பாசனத்துக்குப் பயன்படுத்தியதை அக்கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com