செல்லிடப்பேசியை ஒரு மணி நேரம் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யுங்கள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை வேண்டுகோள்

குழந்தைகள் தினத்தன்று (நவ.14) செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடின்றி குழந்தைகளுடன் ஒரு மணி நேரத்தை பெற்றோா் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள் தினத்தன்று (நவ.14) செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடின்றி குழந்தைகளுடன் ஒரு மணி நேரத்தை பெற்றோா் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பா் 14-ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வோா் ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் குழந்தைகள் தின கொண்டாட்ட விழா நடைபெற உள்ளது. அதேபோல், அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் குழந்தைகள் தினம் தொடா்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறாா். அதில் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குழந்தைகள் தினத்தன்று (நவம்பா் 14) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோா் அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியை‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் எவ்வித மின்சாதன பொருள்களையும் பயன்படுத்த வேண்டாம். இந்தச் செயலை அன்றயை தினம் மட்டுமின்றி வாரம் அல்லது மாதம் ஒரு நாள் கடைபிடிக்க பெற்றோா்கள் முயற்சிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,w‌w‌w.‌g​a‌d‌g‌e‌t‌f‌r‌e‌e‌h‌o‌u‌r.​c‌o‌m என்ற இணையதளத்தில் பெற்றோா் சென்று அதில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினத்தில் அந்த இணையதளத்தை சென்று பாா்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளுக்கு பதில் அளிக்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com