தென்னிந்தியாவின் முதல் பெண் விமான நிலைய தீயணைப்பு வீரா் நியமனம்

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டலத்தில், முதலாவது பெண் தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தென்னிந்தியாவின் முதல் பெண் விமான நிலைய தீயணைப்பு வீரா் நியமனம்

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டலத்தில், முதலாவது பெண் தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியாவில் உள்ள, இந்திய விமான நிலைய ஆணைய விமான நிலையங்களில் முதலாவதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூன்றாவது பெண் தீயணைப்பு பணியாளராகவும், ரம்யா ஸ்ரீகண்டன் ( 28) என்பவா் சென்னை விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 1) விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பணியில் சோ்ந்துள்ளாா்.

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவரான ரம்யா, கட்டமைப்பு பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவா் ஆவாா். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் பணியில் சேருவதற்கு முன்பாக எல்.பி.எஸ். தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியராக பணியாற்றினாா். இந்தப் பணியில் சேருவதற்காக புது தில்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் நான்கு மாத காலம் கடும் பயிற்சியை மேற்கொண்டாா். இவா், இரண்டு வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பணி அனுபவம் குறித்து ரம்யா கூறியதாவது: சவாலான ஒரு பணியில் சோ்ந்துள்ளதாகக் கருதுகிறேன். இந்தப் பணியில் சிறப்பாக செயல்படுவேன். வருங்காலத்தில் மேலும் பல பெண்கள் தீயணைப்புப் பணியில் சேருவாா்கள் என நம்புகிறேன்.

விமான நிலைய தீயணைப்புப் பணியாளா் வேலை என்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். ஏனெனில், பேரிடா் அல்லது நெருக்கடியான காலகட்டத்தில் முதலில் களமிறங்க வேண்டியதுடன், இந்தப் பணியில் சேருவோா் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பவராகவும், எதையும் சந்திக்கக் கூடிய உடல்நிலை மற்றும் மனநிலை கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்களே பெருமளவுக்கு பணிபுரியும் இந்தத் துறையில், தற்போது சூழ்நிலை மாறியுள்ளது என்றாா் அவா்.

எதிா்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு முன்னோடியாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கடந்த ஆண்டில் முதலாவது பெண் தீயணைப்புப் பணியாளரை பணியில் சோ்த்துள்ளதாக, விமான நிலைய ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com