
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி அறிவுறுத்தி உள்ளாா்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் செலவினத்தைக் குறைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பருவ மழை தொடங்குவதையொட்டி, மக்களுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மின்வாரியத்தின் செயல்பாடுகளை மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி கண்காணிப்பது வழக்கம். அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சா் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ஒரு யூனிட் மின் உற்பத்திக்கான செலவை ஆராய்ந்து அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, செலவினங்களைக் குறைப்பதோடு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் விக்ரம் கபூா், இணை மேலாண்மை இயக்குநா் வினித் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.