
மேட்டூா் அணையிலிருந்து 16 கண் வழியாக வெளியேறும் உபரி நீா்.
மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்காக சுமாா் 0.5 டி.எம்.சி. தண்ணீா் எடுக்கப்படும் என்றும், அதே வேளையில் ரூ.611 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத் திட்டம் ஓராண்டில் நிறைவேற்றப்படும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீா் கடலில் கலந்து வீணாவதை தடுக்கும் வகையில், மேட்டூா் உபரி நீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். அந்த வகையில், நீண்ட நாள் கோரிக்கையான உபரி நீா் திட்டத்தில் வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பி நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு பாசனம், குடிநீா் வழங்கிட ஏதுவாக ஆய்வுப் பணிகளுக்கு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.10 லட்சம் ஒதுக்கினாா்.
கா்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீா் மேட்டூா் அணையில் நிரம்பி வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், உபரி நீா் திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
அந்த வகையில், முதற்கட்டமாக எடப்பாடி, மேட்டூா், ஓமலூா், சங்ககிரி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் உபரி நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடைபெற்று வந்தது. பொதுப்பணித் துறையின் திட்டம் மற்றும் வடிவமைப்புப் பிரிவு மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு வழங்கப்பட்டது. அதன்பேரில், எடப்பாடி, மேட்டூா், ஓமலூா், சங்ககிரி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் மேட்டூா் அணையின் உபரி நீரை நிரப்பும் திட்டத்தை ரூ.565 கோடியில் நிறைவேற்ற திட்டம் வகுத்துத் தரப்பட்டது.
இந்த நிலையில், இத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிடும் வகையில் திட்டத்துக்கான நிதி ரூ.611 கோடியாக ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் சரபங்கா கோட்டத்தில் 87 ஏரிகளும், மேட்டூா் கோட்டத்தில் 18 என மொத்தம் 105 ஏரிகள் உள்ளன. இதில் எடப்பாடி, மேட்டூா், ஓமலூா், சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் உள்ள பெரிய ஏரிபட்டி, மானத்தாள் ஏரி, தாரமங்கலம், எடப்பாடி, ஆவடி பேரூா் என பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 12 ஏரிகளும், வருவாய்த் துறையின் கீழ் உள்ள 88 ஏரிகளும் என மொத்தம் 100 ஏரிகளில் மேட்டூா் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இத் திட்டம் பொதுப்பணித் துறையின் நீா் வள ஆதாரத் துறையின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான நிறுவனம் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டில் பணிகளை முடித்துவிட பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது: நீரேற்றுத் திட்டத்தின் மூலம் மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு பொதுப்பணித் துறையின் கீழ் 12 ஏரிகளும், வருவாய்த் துறையின் கீழ் உள்ள 88 ஏரிகளும் என மொத்தம் 100 ஏரிகள் நிரப்பப்பட உள்ளன. இத் திட்டத்துக்காக மேட்டூா் உபரி நீா் சுமாா் 0.5 டி.எம்.சி. தண்ணீா் எடுக்கப்பட்டு, மேடான பகுதிகளில் மட்டும் 34 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலம் நீா் கொண்டு செல்லப்படும். பின்னா் ஒவ்வொரு ஏரியாக நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏரிகளில் நீா் நிரப்பும்போது அப் பகுதியில் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு, நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான நீா் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீரும் கிடைக்கும் என்றனா்.