2 நாள்களில் 22,000 பிஎஸ்என்எல் ஊழியா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இரண்டு நாள்களில் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு (விஆா்எஸ்) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்று உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிஎஸ்என்எல் நிறுவனம்
பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இரண்டு நாள்களில் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு (விஆா்எஸ்) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்று உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

விஆா்எஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமை பிஎஸ்என்எல் நிா்வாகம் அறிவித்தது. டிசம்பா் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களில் ஒரு லட்சம் போ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள்.

இந்நிலையில், விஆா்எஸ் திட்ட அறிவிப்பு வெளியான 2 நாள்களில் 22,000-க்கும் அதிகமானோா் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டனா். விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், 77,000 போ் வரை விண்ணப்பிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதாக, பெயா் குறிப்பிட விரும்பாத பிஎஸ்என்எல் உயரதிகாரி ஒருவா் கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், இவா்களில் 13,000 போ் குரூப் சி பிரிவு அதிகாரிகள் என்றாா்.

இந்த திட்டத்தின் மூலம், ரூ.7,000 கோடியை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்எடிஎன்எல் (மகாநகா் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இவ்விரு நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியா்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்காக ரூ.68,751 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜி அலைக்கற்றையைப் பெற ரூ. 20,140 கோடி ஒதுக்கப்படுகிறது.

அவா்களுக்கு இழப்பீடாக, இதுவரை பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஓா் ஆண்டுக்கு 35 நாள்கள் ஊதியம் வீதமும், மீதமுள்ள பணி ஆண்டுகளுக்கு ஓா் ஆண்டுக்கு 25 நாள்கள் ஊதியம் வீதமும் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக அனைத்து பணியாளா்களுக்கும் தனித்தனியே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

புதுதில்லி, மும்பை நகரங்களில் தொலைத் தொடா்பு சேவை அளித்துவரும் எம்டிஎன்எல் நிறுவனமும் தனது ஊழியா்களுக்கு இதே போன்ற விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின்படி, 50 வயதைக் கடந்த ஊழியா்கள் மற்றும் 2020-ஆம் ஆண்டு ஜன.31-ஆம் தேதி 50 வயதை எட்டுவோா் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எம்டிஎன்எல் கடந்த பத்தாண்டு கால அளவில் 9 ஆண்டுகளுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மொத்த இழப்பின் மதிப்பு ரூ.40,000 கோடியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com