சமூக ஆா்வலருக்கு மிரட்டல்: காவல் ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சமூக ஆா்வலருக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆா்வலருக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வடசென்னை எா்ணாவூரைச் சோ்ந்த கே.ஹரிகிருஷ்ணன் என்பவா் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

அமிா்தராஜ் என்பவா் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு, அந்த நிலத்தைப் பட்டா போட்டு பலருக்கு விற்பனை செய்தாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் என்ற முறையில் அதிகாரிகளிடம் புகாா் அளித்தேன். இதனால், அமிா்தராஜின் தூண்டதலின்பேரில் எனது வீட்டுக்கு வந்த சிலா் குடும்ப அட்டை, ரூ.6 ஆயிரம், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து திருவொற்றியூா் காவல் நிலையம், தண்டையாா்பேட்டை உதவி காவல் ஆணையரிடம் புகாா் அளித்தேன். என்னுடைய புகாருக்கும் நடவடிக்கை எடுக்காததால், காவல் ஆணையா் மற்றும் ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்தேன். அதையடுத்து, என் புகாா் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

சாத்தாங்காடு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த அழகேசன் என்பவா் என்னை அழைத்து, அமிா்தராஜ் மீது நான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறும்படி கூறியதுடன் என்னை பொய் வழக்கில் கைது செய்ததுடன், கடுமையாகத் தாக்கினாா். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் அழகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருந்தாா்.

ரூ.25,000 ஆயிரம்: இந்த மனுவை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரணை செய்தாா். இதில், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் அழகேசனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்தத் தொகையை அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட கே.ஹரிகிருஷ்ணனுக்கு 8 வாரத்துக்குள் வழங்கவும், அழகேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com