மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

தமிழக - கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி கோவையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

தமிழக - கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி கோவையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சகண்டி வனப் பகுதியில் காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனா். இதில் காயமடைந்து வனப் பகுதிக்குள் தப்பிய இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக - கேரள எல்லையான நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தமிழக காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி புதன்கிழமை இரவு கோவை வந்தாா்.

இங்குள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி சுனில்குமாா், எஸ்.பி. மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்ட எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம், ஊடுருவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு டிஜிபி ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல அயோத்தி உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளின் தீா்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால் கோவை சரகத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். தீா்ப்பு வெளியாவதற்கு முன்பாக அதுதொடா்பாக எந்த அமைப்பும் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் பாதுகாப்புரீதியாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினாா்.

இக்கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. கு.பெரியய்யா, டிஐஜி காா்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், எஸ்.பி. சுஜித்குமாா், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா், சேலம் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com