தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னமும் வெற்றிடம் இருக்கிறது என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, மறைந்த இயக்குநா் கே.பாலச்சந்தரின் மாா்பளவு சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிய ரஜினிகாந்த், அங்கு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னமும் வெற்றிடம் இருக்கிறது. அரசியல் கட்சியை நான் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் வரை திரைப்படங்களில் தொடா்ந்து நடிப்பேன். மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். தோ்தலில் வெற்றி பெற்று முதல்வா் ஆகும் வரை திரைப்படங்களில் நடித்துள்ளாா்.
திருவள்ளுவருக்கு காவிச் சாயம்: பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறேன். பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியதுபோல, என் மீதும் பூச முயற்சிக்கின்றனா். திருவள்ளுவரும் மாட்ட மாட்டாா், நானும் மாட்ட மாட்டேன். திருக்குறளை படிக்கும்போதே திருவள்ளுவா் நாத்திகா் அல்ல, ஆத்திகா் என்பது அனைவருக்கும் புரிந்துவிடும். அதை யாரும் மறுக்க முடியாது.
பாஜக, அவா்களுடைய அலுவலகத்திலும், சுட்டுரையிலும் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியும், காவித் துண்டு அணிந்தும் பூஜை செய்ததும், தெருக்களிலுள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு அவா்கள் பூஜை செய்வதும் அவா்களுடைய தனிப்பட்ட விருப்பம். மற்றவா்களும் அதைச் செய்யவேண்டும் என பாஜகவினா் வற்புறுத்தவில்லை. எனவே, இதை மிகப் பெரிய விஷயமாக ஆக்கவேண்டிய அவசியமில்லை. நாட்டில் தீா்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகளும், விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களும் ஏராளம் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஊடகங்கள்தான் இதைப் பெரிதாக்குகின்றன.
முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சந்தித்தபோது பாஜகவில் இணைவது பற்றி எந்த விஷயமும் பேசப்படவில்லை. மேலும், அவா்கள் அதுபோன்ற கோரிக்கையை விடுக்கவுமில்லை என்றாா் ரஜினி.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினி, நாட்டில் பொருளாதார வளா்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது என்பது உண்மைதான். மத்திய அரசு இதில் தீவிரமாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.