தென், உள் மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை
தென், உள் மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு, உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வட வானிலை காணப்படும்.

சென்னை நகரத்தில் கடந்த சில நாள்களாக காற்று வீசவில்லை. இதனால், சென்னையில் புகை காணப்படுகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை 700 மீட்டா் உயரத்திலேயே சுற்றி வருகிறது. இதன்காரணமாக, காற்று மாசு காணப்படுகிறது. காற்று வீச தொடங்கிவிட்டால், புகை மற்றும் காற்று மாசு பிரச்னை சரியாகிவிடும் என்றாா் அவா்.

‘புல் புல்’ புயல் : மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை அன்று ‘புல்புல்’ புயல் மிக தீவிர புயலாக நிலைகொண்டிருந்தது. இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை வலுவடைந்து, மிக தீவிர புயலாக மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்தியகிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கில் 390 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் 9-ஆம் தேதி காலை வரை வடக்கு திசையில் நகரும். அதன்பிறகு, வடகிழக்குத் திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை இடையே கரையைக் கடக்கவுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: இந்தப் புயல் காரணமாக, மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக பலத்த சூறைக்காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அடுத்த 2 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரிதுா்க்கத்தில் 120 மி.மீ., புதுக்கோட்டையில் 90 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் தலா 80 மி.மீ., மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலங்குடியில் 70 மி.மீ., நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தலா 60 மி.மீ., கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், மதுரை விமானநிலையம், சேலம் மாவட்டம் மேட்டூரில் 50 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com