பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துக: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தக் கோரி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புகைப்படம்: டிவிட்டர் | திமுக
புகைப்படம்: டிவிட்டர் | திமுக


பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தக் கோரி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான பொதுக்குழுக் கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் முதல் முறையாக பொதுக்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் அல்லாமல் வெளியே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, ஸ்டாலின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதில், இந்திய அரசியல் சட்டத்தின் 70-ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:

*  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது; 

*  நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation) கொண்டுவருவது ; 

*  அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  எஞ்சிய  அதிகாரங்கள்   (Residuary Powers) அனைத்தும்  தற்போது மத்திய  அரசுக்கே உள்ள  நிலையை மாற்றி, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றிக் கொள்ள வழிவகை செய்வது;         

*  நிதி, கல்வி, மான்யம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மத்திய அரசு கையாண்டு வரும்  “பெரிய அண்ணன்”  மனோபாவம் தவிர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது;

உள்ளிட்டவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

எது சமூகநீதியின் சரியான பாதை?:

திமுகவின் மற்றொரு தலையாய கொள்கை “சமூக நீதி” யாகும். சமூகநீதியைப் பெறுவதிலும், பெற்ற சமூக நீதியைக் காப்பதிலும் திமுகவின் தனித்த, தொடர்ச்சியான அரசியல் போராட்ட வரலாறு உண்டு.  சமூக நிலையிலும், கல்வியிலும், பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வரும்  இடஒதுக்கீட்டுக் கொள்கையில்  “பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்’’ என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை  திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்பட வேண்டிய  27 சதவிகித ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்க்கான 22.5 சதவிகித ஒதுக்கீடும் மத்திய அரசு முழுமையாகச் செயல்படத்திடவில்லை.  எனவே, சமூகநீதியின் இந்தக் குறைபாடு துடைக்கப்பட வேண்டும் என்றும்;  நிரப்பப்படாத சதவிகிதப் பணி இடங்களை முன்கொணர்ந்து நிரப்பவும் (Carry Forward) கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும்; நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டை  50 சதவிகிதமாக உயர்த்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்றும்; இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள் இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன.  பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக  தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும்  இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது. அதுவே, சமூகநீதியின் சரியான பாதையாக இருக்கும். இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com