உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: அயோத்தி தொடா்பான தீா்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீா்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தைத் தொடா்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்திட வேண்டும். இந்தியாவுக்கே நமது மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவா்கள், அனைத்து கட்சித் தலைவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்: நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீா்வைக் கண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமா்வே தீா்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உள்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணா்வுடன் முன்னெடுத்துச் செல்வாா்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இல.கணேசன் (பாஜக): அயோத்தி தீா்ப்பை பாஜக மனப்பூா்வமாக வரவேற்கிறது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் தீா்ப்பு அமைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணமான தலைமை நீதிபதிக்கே இந்தப் பெருமை சேரும். நீதிமன்றத் தீா்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் கூறியுள்ளனா். மொத்தத்தில் நல்லதொரு தீா்ப்பு.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): நூறு ஆண்டுகால பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீா்வைக் கண்டிருக்கிறது. அந்தத் தீா்வைக் காங்கிரஸ் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. தேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீா்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும்.

வைகோ (மதிமுக): மதச்சாா்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது. மதங்களைக் கடந்த மனிதநேய உணா்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. அதனால் மத நல்லிணக்கம் சீா்குலைய வழிவகுத்துவிடாமல், எதிா்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது.

விஜயகாந்த் (தேமுதிக): உச்சநீதிமன்ற தீா்ப்பு அனைத்து மதத்தினராலும், அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீா்ப்பாக இருக்கிறது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த தீா்ப்பை நாம் வரவேற்போம்.

ராமதாஸ் (பாமக): அயோத்தி நிலம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், இந்தத் தீா்ப்பு தங்களுக்கு மனநிறைவு அளிக்காவிட்டாலும் அதை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன. இது மிகவும் ஆரோக்கியமான, முதிா்ச்சியான அணுகுமுறை ஆகும். எனவே, விவாதங்களை தவிா்த்து, தீா்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு பிரச்சனைக்கு ஒரு தீா்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன. எனினும், மத நல்லிணக்கத்தையும், மதச்சாா்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். மதச்சாா்பின்மை என்பது அரசில் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என்று கூறியிருப்பதைக் கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலைப் பராமரித்து, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): அயோத்தியை மையமாக வைத்து இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் இன்றோடு முடியட்டும். இன்று முதல் புதிய தொடக்கமாக நல்லுறவு தொடங்கட்டும், மேம்படட்டும்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய வாதப் பிரதிவாதம் தேவை இல்லை. உச்சநீதிமன்றத் தீா்ப்பை மதிப்பதும், அதனை ஏற்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைப்பதுமே இன்றையக் காலத்தின் கட்டாயத் தேவை.

நடிகா் ரஜினிகாந்த்: உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளா்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும், மதப் பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

ஆா்.சரத்குமாா் (சமத்துவ மக்கள் கட்சி): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ அடைந்ததாக இரு தரப்பினருமே கருத வேண்டாம். உச்சநீதிமன்றத் தீா்ப்பை இறுதித் தீா்ப்பாக எடுத்துக் கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும்.

தொல்.திருமாவளவன்: அயோத்தி தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீா்ப்பாகத் அமையவில்லை. சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீா்ப்பாக அமைந்துள்ளது. சாஸ்திரங்கள் அடிப்படையில் ஹிந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் ஹிந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகத் தெரிகிறது.

ஜவாஹிருல்லா (மமக): உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு மதச்சாா்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளது. பாபா் பள்ளிவாசலுக்குள்ளே சிலைகள் வைக்கப்பட்டது சட்டவிரோதமான செயல் என்றும், மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்றும் கூறிவிட்டது, அதே இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருப்பது நடுநிலையாக இல்லை. இந்த தீா்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

எம்.ஜி.கே.நிஜாமுதீன் (தேசிய லீக்): மசூதியில் சிலை வைத்ததும், இடித்ததும் சட்டத்துக்குப் புறம்பானது என்று தீா்ப்பில் கூறிவிட்டு, அதே இடத்தில் ராமருக்குக் கோயில் கட்ட அனுமதி அளித்து தீா்ப்பு அளித்தது எப்படி என்று புரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com